×

நாலா பக்கம்:புதுவை - கேரளா - மேற்கு வங்கம் - அசாம்

நம்பிக்கையுடன் களம் இறங்கும் கம்யூனிஸ்டுகள்
ஒரு காலத்தில் கேரளா, திரிபுரா, மேற்கு வங்க மாநிலங்கள், முழுக்க முழுக்க  கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக இருந்தன. இன்று திரிபுரா, மேற்கு வங்கத்தில் நிலைமை தலைகீழாகி விட்டது. கேரளாவில் மட்டுமே இடது முன்னணி மாறி மாறி ஆட்சியை பிடித்து, காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆனால், 1977 முதல் 2011 வரையில் தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இப்போது 7 சதவீத ஓட்டு வங்கியுடன் சுருங்கி கிடக்கிறது. கடந்த மக்களவை தேர்தல் முடிவுகளின் மூலம் இது உறுதியாகி இருக்கிறது. இதனால், இம்முறை தனது ஓட்டு வங்கியை அதிகரிப்பது மட்டுமின்றி, ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் எதிர்க்கட்சி அந்தஸ்துக்காவது உயர வேண்டும் என்று முனைப்புடன் காங்கிரசுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

புதியதாக முளைத்த 3 குட்டி கட்சிகள்
அசாமில் பாஜ., காங்கிரசுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இருப்பினும்,  கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகளை பொறுத்தே அவற்றின் வெற்றி, தோல்வி முடிவாகும். இதுபோன்ற இம்மாநிலத்தில் புதிதாக முளைத்துள்ள 3 கட்சிகள், இந்த வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்ற கணிப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக, அசாம் மொழி பேசும் வாக்காளர்களை குறிவைத்து அசாம் ஜாதிய பரிஷத், ரஜியோர் தல், அஞ்சலிக் கன மோர்ச்சா ஆகிய கட்சிகள் புதிதாக உருவாகி உள்ளன. மாநில ரீதியிலான இன அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளாகவும், அசாம் அரசியலில் கடந்த 40 ஆண்டுகளாக முக்கியத்துவம் பெற்று வரும் மாணவர்கள் அமைப்புகளில் இருந்தும் இக்கட்சிகள் உருவாகி இருப்பது கூடுதல் சிறப்பு. அதனால், புதிய கட்சிகளாக இருந்தாலும் இவற்றை அலட்சியப்படுத்தி விட முடியாது என இருபெரும் கட்சிகளான பாஜ.வும், காங்கிரசும் கணக்கு போட்டுள்ளன. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதால், இவற்றை இழுக்கும் முயற்சியில் அவை தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கூட்டணிக்குள் சிண்டு முடியும் சர்ச்சை தொகுதி
கேரளா காங்கிரஸ் (மாணி) தலைவர் மாணியின் மறைவுக்குப் பின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பலா சட்டப்பேரவை தொகுதி, கூட்டணி தொகுதி பங்கீட்டில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு (என்சிபி) ஒதுக்கப்பட்டது. இதன் மாநில பொருளாளர் மாணி சி. கப்பன், இத்தொகுதி எம்எல்ஏ.வாக இருக்கிறார். இத்தேர்தலிலும் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட போவதாக இவர்  அறிவித்துள்ளார். இதனால், ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் சசீந்திரன், `பத்திரிகை செய்திகளில் மட்டும்தான் என்சிபி, எல்டிஎப். கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது. ஆனால், என்சிபி மாநிலத் தலைவர் பீதாம்பரன், இன்னும் எல்டிஎப் கூட்டணியில் இருப்பதாக கூறியுள்ளார்,’ என்று சொல்லி வருகிறாராம். இதனிடையே, பீதாம்பரன், மாணி சி. கப்பனை டெல்லி வர சொல்லி கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாம். இந்த சந்திப்பிற்கு பின்னரே, எல்டிஎப் கூட்டணியில் என்சிபி இருக்கிறதா என உறுதியாக தெரியும் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.

தூக்கியடி, பந்தாடு.. ஆட்டம் ஆரம்பம்
புதுச்சேரியில் இப்போதுதான் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு, நேற்று இங்கு 2ம் நாளாக தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆய்வு நடத்தியது. இதன் பக்கவிளைவுதான் என்னவோ, பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பட்டா போட்டு அமர்ந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை வேறு இடங்களுக்கு தூக்கியடிக்கும் நடவடிக்கை அதிரடியாக தொடங்கி இருக்கிறது. நேற்று ஒரே  நாளில் மட்டுமே 20 இன்ஸ்பெக்டர்கள், 51 எஸ்ஐ.க்கள் அதிரடியாக இடமாற்றம்  செய்யப்பட்டனர். இது  ஆரம்பம் மட்டும்தானாம். மெயின் சினிமா இனிமேல்தான் இருக்கப் போகிறது என்கிறது தேர்தல் ஆணைய வட்டாரங்கள். அடுத்தக் கட்ட தூக்கியடி, பந்தாடு சம்பவத்துக்காக, புதுச்சேரி முழுவதும் அதிகாரிகளை பட்டியல் போடும் பணியும் தொடங்கி விட்டதாம். இதனால், அதிகாரிகள் நடுக்கத்தில் இருக்கிறார்கள்.


Tags : Kerala ,New Delhi ,Assam ,West Bengal , Communists entering the field with confidence Once upon a time the states of Kerala, Tripura and West Bengal
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு