×

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

* மருத்துவமனைகளில் 6 குழந்தைகள் அனுமதி
* சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்படுமா?

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவுகிறது. அரசு மருத்துவமனையில் மட்டும் 6 குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றன. எனவே சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த 2012ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவியது. அந்த சீசனில் 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர். மேலும் ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சல் பாதித்து மீண்டனர். இதைத் தொடர்ந்து பல மாவட்டகளில் டெங்கு காய்ச்சல் பரவியது. ஒவ்வொரு ஆண்டும் மழை சீசனை தொடர்ந்து குறைந்த அளவில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. இந் நிலையில் கடந்த சில தினங்களாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.

 வாரத்திற்கு ஒருவர் பாதிப்பு என்ற நிலை மாறி தற்போது ஒருநாள்விட்டு ஒரு நாள் என்ற அளவில் மாவட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். கடந்த சில வாரங்களில் சிவகிரி, திசையன்விளை, வைகுண்டம், சாத்தான்குளம், போன்ற பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று திரும்பினர். இதை ெதாடர்ந்து கடந்த சில தினங்களில் தென்காசி, புளியங்குடி, கடையநல்லூர், கல்லிடைக்குறிச்சி, ராஜபாளையம், பாளை அடுத்துள்ள கொங்கந்தான்பாறை, கேடிசிநகர், கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

நேற்றைய நிலவரப்படி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 வயதிற்குட்பட்ட 4 குழந்தைகளும் தனியார் மருத்துவமனைகளில் இரு குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான தனி காய்ச்சல் வார்டு மற்றும் குழந்தைகளுக்கான அதி தீவிர ஐசியு வார்டு டெங்கு காய்ச்சலுக்காக செயல்படுகிறது. பெரியவர்களுக்கான காய்ச்சல் வார்டும் திறக்கப்பட்டு முன்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என டீன் டாக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சுகாதார துறை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டாலும், புதிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே தென்மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு ெபரிய அளவில் பரவுவதற்கு முன்னதாக ஏடிஸ் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் பகுதிகளுக்கு கூடுதல் மஸ்தூர் பணியாளர்கள் நியமிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை ஜனவரி 3ம் வாரம் வரை நீடித்ததால் நீர் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.



Tags : districts ,Nellai ,Tenkasi , Nellai, Tenkasi districts Fast-spreading dengue fever
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு