×

சர்ச்சையாகவே பேசிப் பேசி ெதாகுதி பேரை கெடுத்துட்டாரு...!திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏ அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழநி, நத்தம், வேடசந்தூர் ஆகிய  7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மதுரைக்கு அடுத்த மாநகராட்சி என்ற பெருமைக்குரியதான நகர் பகுதியை உள்ளடக்கிய திண்டுக்கல் தொகுதி பிரதான இடம் பிடித்திருக்கிறது.
திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் கடந்த முறை அதிமுக வேட்பாளரான திண்டுக்கல் சீனிவாசன் வெற்றி பெற்றார்.  அப்போது திமுக நகர் செயலாளராக இருந்த பசீர் அகமது இவரை எதிர்த்துப் போட்டியிட்டார். பிரியாணி, பூட்டு, சுருட்டுக்கு சிறப்பு பெற்ற இத்தொகுதியில் வீரம் செறிந்த வரலாற்றை வாசித்துக் காட்டும் மலைக்கோட்டை இருக்கிறது.
பூட்டுத்தொழில் புஸ்ஸ்....
திண்டுக்கல் மாவட்டத்துக்கு புகழ் சேர்க்கும் பூட்டுத்தொழில், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மேம்படவில்லை. தேர்தல் வாக்குறுதியாக பூட்டு பற்றி பேசியே பிரசாரம் செய்த திண்டுக்கல் சீனிவாசன், ஜெயித்த பிறகு பூட்டு தொழிலை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இத்தொழில் தற்போது  200க்கும் குறைவானவர்களே ஈடுபடும் அளவுக்கு சுருங்கி இருக்கிறது.
தோல் தொழிலும் காலி...
தொகுதிக்குள் 70க்கும் அதிக தோல் தொழிற்சாலைகள் செயல்பட்டன. தற்போது இந்த ஆலைகள் 40 ஆக குறைந்து விட்டன. தோல் ஆலைகளால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதை தடுப்பதற்கான திட்டங்களை அமைச்சராக இருந்தும் திண்டுக்கல் சீனிவாசன் செயல்படுத்தவில்லை. இதனால் இத்தொழிலை நம்பியிருந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
டிஷ்யூம்... டிஷ்யூம்...
தொகுதியை பொறுத்தவரை இவரும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், தனித்தனி கோஷ்டிகளாக உள்ளனர். இருவரிடையே யார் பெரியவர் என்ற போட்டி பல ஆண்டுகளாக நிலவுகிறது. இதனால் கட்சியில் கோஷ்டிப்பூசல் பெருகி உள்ளது. இது கட்டாயம் தேர்தலிலும் எதிரொலிக்கும் என மக்கள் கூறு்கின்றனர்.
தண்ணீரைத் தேடி....
தேர்தல் வாக்குறுதியாக நகருக்கு தினமும் குடிநீர்  கிடைக்க வழி செய்வேன் என்றார் திண்டுக்கல் சீனிவாசன். ஆனால் வாரத்திற்கு ஒருமுறை குடிநீர்  கிடைப்பதே இங்கு அரிதாக உள்ளது. இன்றைக்கும் தொகுதிக்குள்  காலிக்குடங்களுடன் பெண்கள் அலைந்து திரிவது பரிதாபத்தை ஏற்படுத்தி  இருக்கிறது.
திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக்கல்லூரி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் நானே காரணம் என பேசி வருகிறார். சர்ச்சையாக பேசியே தமிழக மக்களிடம் மட்டுமல்ல தொகுதி மக்களிடமும் கடும் அதிருப்தியை சந்தித்துள்ளார்.
‘‘இவரை நம்பி கடந்த தேர்தலில் அந்தம்மா சீட் கொடுத்தாங்க. இவரு எதுவுமே செய்யலை. பிரதமர் பெயர்களை மாத்தி சொல்றது, ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை என சொன்னது, அவர் இட்லி சாப்பிட்டது பொய் என பொதுக்கூட்டத்தில் பேசியது எல்லாம் அதிமுகவினரிடமே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதையெல்லாம் விட சிறுவனை கூப்பிட்டு செருப்பை மாட்டி விடச் சொன்ன விவகாரம் பெரிய சர்ச்சையானது. இவரால திண்டுக்கல் என்ற பெயரை சொன்னாலே ‘அட... அவரு தொகுதியா என்று கேட்டு சிரிக்கிறாங்க...’ என்கின்றனர் தொகுதி மக்கள்.

‘நான் செஞ்சதை சொல்ல முடியாது...’
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறும்போது, ‘‘நான் தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறேன். அதை ஒரு வரியில் சொல்ல முடியாது. மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி என்று அத்தனை பகுதிக்கும் நிறைய செய்துள்ளேன். தேர்தல் அறிவிக்கும் போது, நான் என்னென்ன செய்தேன் என்பதை பிரிண்ட் அவுட்டாகவே வெளியிடுகிறேன்’’ என்கிறார்.

‘உள்ளூரு அமைச்சரு..ஒண்ணுமே செய்யல...’
2016ல் திமுக வேட்பாளராக போட்டியிட்ட பசீர் அகமது கூறும்போது, ‘‘முதலில் பஸ் ஸ்டாண்டை மாற்றுவதாக தேர்தலின்போது தந்த வாக்குறுதியை இதுவரை திண்டுக்கல் சீனிவாசன் நிறைவேற்றவில்லை. நெருக்கடியில் மக்கள் பெரும் அவதியடைகின்றனர். திண்டுக்கல் முருகபவனம் மாநகராட்சி குப்பைக்கிடங்கை, நகருக்கு வெளியே கொண்டு செல்வதாக கூறியதும் நடக்கவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன்பு திமுக போட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தையும், 48 வார்டுகளில் 24 வார்டுகளில் இன்னும் நிறைவேற்றவில்லை. ரோடு போடவில்லை. போட்ட ஒரு சில ரோடுகளும் தரமில்லை. எந்த தொழிற்சாலையும் கொண்டு வரவில்லை. ஏற்கனவே இருந்த தொழில்களையும் காப்பாற்றவில்லை. நகரின் முக்கால்வாசி இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் இல்லை. உள்ளூர் அமைச்சர், தான் ஜெயித்த உள்ளூர் தொகுதிக்கே எதுவும் செய்யவில்லை’’ என்கிறார்.

2016 சட்டசபை தேர்தல் டேட்டா
மொத்த வாக்குகள்        2,48,751
பதிவானவை        1,85,419
சீனிவாசன் (அதிமுக)    91,413
பசீர் அகமது (திமுக)        70,694
பாண்டி (மார்க்சிஸ்ட்)    8,657
திருமலை பாலாஜி (பாஜ)    5079

2019 நாடாளுமன்ற
தேர்தல் ஓட்டு விபரம்
பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் மட்டும் பதிவான வாக்கு விபரம்:
மொத்த வாக்குகள்        1,81,005
செல்லத்தக்கவை        1, 77, 834
வேலுசாமி (திமுக)        1,10,003
ஜோதிமுத்து (பாமக)    26,629
டாக்டர் சுதாகரன் (மநீம)    15,315



Tags : Dindukkal Srinivasan ,Dindigul , Dindigul MLA Minister Dindukkal Srinivasan has spoiled the people by talking controversially ...!
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு