×

போதைக்கு மயங்கும் சிறுவர்கள்!: நாடு முழுவதும் 40 லட்சம் சிறார்கள் வலி நிவாரண மருந்து போதைக்கு அடிமை..!!

சென்னை: வலி நிவாரண மருந்துகளை போதைக்காக பயன்படுத்தும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மது, கஞ்சாவை போன்று வலி நிவாரண மருந்துகளை சாப்பிட்டால் வாசனை வராது என்பதே இதற்கு காரணம். நாடு முழுவதும் 40 லட்சம் சிறுவர்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் மருந்துகளை பயன்படுத்தி போதையில் மிதப்பது தெரியவந்துள்ளது. போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை புலனாய்வு அமைப்புகள் முடுக்கிவிட்டாலும், இப்போது சிறுவர்கள் மத்தியில் வலி நிவாரண மருந்துகளை போதைக்காக பயன்படுத்தும் பழக்கம் பரவி வருகிறது. மது, கஞ்சாவை விட குறைந்த விலையில் கிடைப்பதால் இதற்கு அடிமையாகும் சிறார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய சமூகநீதித்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பட்டியலில், நாடு முழுவதும் 10 முதல் 17 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களில் 40 லட்சம் பேர் வலி நிவாரண மருந்துகளை போதைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மது, கஞ்சா பயன்படுத்துவதை காட்டிலும் அதிகம். தின்னர் உள்ளிட்ட நுகர்ந்து பார்க்கும் போதை பழக்கத்திற்கு 30 லட்சம் சிறுவர்களும் மது போதைக்கு 30 லட்சம் பேரும் ஆளாகியுள்ளனர். மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கொடுக்கக்கூடாது என்பது விதி. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் 20 ரூபாய்க்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டை போதை சிறுவர்களுக்கு விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் உலா வருகின்றனர்.

மது, கஞ்சா சாப்பிட்டால் அவற்றின் வாசனை மற்றவர்களுக்கு காட்டி கொடுத்துவிடும். ஆனால் வலி நிவாரண மருந்தில் அத்தகைய பிரச்சனை இல்லை. மற்ற போதை வஸ்துக்களை விட விலையும் குறைவு என்பதால் சிறுவர்கள் இவற்றின் பக்கம் சாய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் வறுமையில் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும், படிப்பை பாதியில் விட்டவர்களாகவும் உள்ளனர். சென்னை அருகே செங்கல்பட்டில் சிறார்களுக்கான போதை மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறார் சீர்திருத்த இல்லங்களுக்கு வருகிற சிறுவர்களில் போதை பழக்கம் உள்ளவர்கள் இங்கு சேர்க்கப்படுகின்றனர். அவர்களில் 10 - 14 வயதிற்குட்பட்ட சிறார்கள் வலி நிவாரண மருந்து போதைக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபடுவது உறுதியாகியுள்ளது.


Tags : boys ,children ,country , Drug addiction, nationwide, 40 lakh children, pain relief drug, addiction
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு