மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மூடப்பட்டுள்ள கழிப்பிடம்-பயணிகள் கடும் அவதி

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள இரு கிளைகளில் இருந்து ஊட்டி சுற்று வட்டாரத்தில் உள்ள

பல்வேறு கிராமங்ளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதுதவிர சமவெளி பகுதிகளான கோவை, ஈரோடு,திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும், பெங்களூர், மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதே போல பிற மாவட்டங்களில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டை பயன்படுத்துகின்றனர். இங்கு வர கூடிய பயணிகளின் அவசர தேவைகளுக்காக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கட்டண கழிப்பிடம் உள்ளது.

இந்த  கட்டண கழிப்பிடம் கடந்த பல மாதமாக திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் தங்களின் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குறிப்பாக பெண்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் கேட்ட போது, ஒப்பந்தம் எடுத்தவரின் டெண்டர் காலம் நிறைவடைந்த நிலையில், தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், விரைவில் டெண்டர் விடப்பட்டு திறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் டெண்டருக்கான பணிகள் ஏதுவும் துவங்காத நிலையில், பயணிகளின் நலன் கருதி போக்குவரத்து கழகமே தனியாக ஊழியர் ஒருவரை நியமித்து கட்டண கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  இதேபோல் கூடலூர் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பிடமும் மூடப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், ஊட்டி  பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப்பிடம் மூடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மறு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர் வரும் வரை போக்குவரத்து கழகமே தனியாக ஊழியர் நியமித்து கழிப்பிடத்தை திறந்து நடத்திட வேண்டும், என்றார்.

Related Stories:

>