×

காதலர் தினத்தையொட்டி ஓசூர் ரோஜா ஏற்றுமதிக்கு இதுவரை 20% ஆர்டர்தான்-மலர் விவசாயிகள் ஏமாற்றம்

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்ல மண்வளம் மற்றும் சீரான தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளது.இதனால் அதிகம் ரோஜாமலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.பசுமைகுடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரோஜா மலர்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இங்கு உற்பத்தி செய்யப்படும் தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகையான ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர்தின விழா கொண்டாட்டங்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இதில் காதலர் தினத்திற்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி மலர்கள் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.இதன் மூலம் அன்னிய முதலீடுகளும் பெறப்பட்டன.இந்நிலையில் இந்த ஆண்டு காதலர் தின கொண்டாங்களுக்காக ஏற்றுமதி அதிகரிக்கும்  என விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

காதலர் தினத்திற்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது வரை 20 சதவீத ஆர்டர்கள் மட்டுமே வெளி நாட்டிற்கான ஏற்றுமதி ஆர்டர்கள் வந்திருப்பதால் ஒசூர் பகுதி ரோஜாமலர் சாகுபடி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத இறுதி நாள்களில் உலகின் பல்வெறு நாடுகளிலிருந்து ரோஜா மலர்களை அனுப்பி வைக்க ஆர்டர்கள் வரும்.

ஆனால் நடப்பாண்டு கொரோனா தாக்கத்தால் ஆர்டர்கள் முழுமையாக வரவில்லை  உலகின் பல நாடுகளில் இன்றளவும் கொரோனா தாக்கம் இருப்பதால் காதலர் தினம் போன்ற விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படவில்லை என்பதுதான் இதற்கு காரணம்.  இந்தியாவிலுள்ள உள்ளுர் சந்தைகளில் ஓசூர் ரோஜா மலர்களுக்கு தற்போது நல்ல விலை கிடைத்து வருகிறது.இருந்தபோதிலும் காதலர் தின விழாவிற்காக வெளிநாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதியானால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

ரோஜாமலர் விவசாயத்தை நம்பி ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 2 ஆயிரம் விவசாயிகளும், 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்களும் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரோஜாமலர் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்தித்த இவர்கள் தற்போது காதலர்தின ஏற்றுமதியை நம்பி உள்ளனர். காதலர் தின விழாவிற்காக இதுவரை வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வராததால் வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனர் பாலசிவபிரசாத் கூறுகையில், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் விமான பயண கட்டணம் உயர்ந்துள்ளது.இதனால் அண்டை நாடுகளுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய முடிகிறது. தமிழக முதல்வர் விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்துள்ளது வரவேற்கும் வகையில் உள்ளது என்றாலும், மலர் விவசாயிகள் இதன் மூலம் பலன் அடைய முடியாது என்பதால் மலர் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய அரசு முன்வர வேண்டும் என்றார்.

Tags : Order-flower growers ,Hosur , Hosur: Hosur in Krishnagiri district has good soil and temperate climate.
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்