சென்னை: சசிகலா ஒரு காலாவதி மாத்திரை. அவரால் கட்சிக்கு எந்த பயனுமில்லை என அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, திண்டுக்கல் சாலையில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் 104வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் பாஸ்கரன், செய்தி தொடர்பாளர்கள் வைகைச்செல்வன், மருதுஅழகுராஜ் பங்கேற்றனர். கூட்டத்தில் வைகைச்செல்வன் பேசியதாவது: சசிகலாவை பொதுச்செயலாளராக பொதுக்குழுவில் தீர்மானம் வாசித்தது நான்தான். நாங்கள் உங்களை ஏற்றுக் கொண்டோம். அதிமுக உங்களுக்காக வாசலைத் திறந்து வைத்திருந்தது.
ஆனால், மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்ஜிஆர் இல்லை. அதன்பின் ஜெயலலிதா வந்தார். அவரும் இறந்து விட்டார். உங்களில் ஒருத்தர் இல்லையா ஆட்சி நடத்துவதற்கு என கிராமப்புற மக்கள் கேள்வி கேட்டனர். அதன் பிறகு இபிஎஸ், ஓபிஎஸ் என்ற அடிப்படை தொண்டர்கள் கட்சியை வழி நடத்துகின்றனர். காய்ச்சலுக்கு மாத்திரை போட்டுக்கொள்ளலாம். ஆனால், காலாவதியான மாத்திரையை போட்டுக்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்பட்டு விடும். சசிகலா ஒரு காலாவதியான மாத்திரை. அவரால் கட்சிக்கு எந்த பயனுமில்லை. டோக்கன் கொடுத்து வாக்காளர்களிடம் கடன் வைத்தவர் தினகரன். இவ்வாறு அவர் பேசினார். டோக்கன் கொடுத்து வாக்காளர்களிடம் கடன் வைத்தவர் டிடிவி.தினகரன்.