×

தோவாளையில் கும்பப்பூ அறுவடை தீவிரம்: விவசாயிகள் ஆர்வம்

பூதப்பாண்டி: தோவாளை தாலுகாவுக்கு உள்பட்ட இறச்சகுளம், ஈசாந்திமங்கலம், தெரிசனம்கோப்பு, கடுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது கும்பப்பூ சாகுபடி நெல் அறுவடை நடந்து வருகிறது. இந்த பகுதிகளில் ஒரே நேரத்தில் அறுவடை நடக்கிறது. ஆகவே தற்போது இயந்திரங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதேபோல் அறுவடை செய்த நெல் மற்றும் வைக்கோலை விற்பனை செய்யும் வேலைகளிலும் விவசாயிகள் இறங்கி உள்ளனர். கடந்த கன்னிப்பூ பருவத்தில் மழை காரணமாக நெல் மணிகள் முளைத்தும், வைக்கோல் அழுகியும் விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்தனர். தற்போது கும்பப்பூ அறுவடையில் மழை சேதம் எதுவும் இல்லாமல் அறுவடை சரிவர நடந்து வருகிறது.

இதே போல அறுவடை செய்த நெல்மணிகளை மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வதை விட, தமிழக அரசு செயல்படுத்தி வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்யவே விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல்லை விற்பனை செய்தால், 87 கிலோ கொண்ட ஒருகோட்டை நெல்லுக்கு வெளிமார்க்கெட்டில் கிடைப்பதைவிட ரூ.400 அதிகம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது வெளிமார்க்கெட்டில் ஒரு கோட்டை நெல் ரூ.1,300ல் இருந்து ரூ.1,350 வரை விலைக்கு வாங்கப்படுகிறது. ஆனால் அரசு கொள்முதல் நிலையங்களில் ஒரு கோட்டை நெல் ரூ.1,750க்கு வாங்கப்படுகிறது. ஆனால் திட்டுவிளையில் இயங்கி வரும் அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. மேலும் ஒரேயொரு பணியாளர் மட்டுமே உள்ளார். இதனால் பகல் 11 மணியளவில் நெல்லை வாங்க தொடங்குகிறார். கூடுதலாக ஒரு பணியாளரை நியமித்தால் அதிகாலை 7, 8 மணியளவில் நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்க ஏற்பாடு செய்யலாம்.

தோவாளை தாலுகா பகுதியை பொறுத்த மட்டில் பொன்மணி, டிடிஎஸ் போன்ற நெல் ரகங்கள் அதிகம் பயிரிடப்பட்டு உள்ளன. வழக்கமாக ஒரு ஏக்கருக்கு 30 கோட்டை வரை நெல் விளையும். ஆனால் இந்த முறை ஒரு ஏக்கருக்கு 20 முதல் 21 கோட்டை வரை மட்டுமே நெல் விளைந்துள்ளது. நெற்கதிர்கள் வரும் வேளையில் மழை மற்றும் பனி இருந்ததால் விளைச்சல் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல குமரி மாவட்டத்தில் மாடுகள் வளர்ப்பது குறைந்து வருவதாலம், கேரள வியாபாரிகள் வராததாலும் வைக்கோல் விலை குறைந்து விட்டது. வழக்கமாக ஒரு ஏக்கர் வயலில் இருந்து கிடைக்கும் வைக்கோல் ரூ.6,000 விலை போகும். ஆனால் தற்போது ஒரு ஏக்கர் வைக்கோல் ரூ.3,500 முதல் 4,000 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

நெல் பயிரிட ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஆனால் நெல், வைக்கோல் என விற்பனையாகும்போது ரூ.25 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. அப்படியானால் சொந்த வயல் வைத்திருப்பவர்களுக்கு ரூ.5,000 வரை மட்டுமே லாபம் கிடைக்கிறது. ஆனால்குத்தகைக்கு எடுத்து பயிர் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைப்பதில்லை. இதுபோல அறுவடை இயந்திரங்கள் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. இந்த இயந்திரத்தை பயன்படுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,000 வாடகை செலுத்த வேண்டும். ஆனால் வேளாண்துறை சார்பில் ரூ.1,500க்கு அறுவடை இயந்திரம் வாடகைக்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இயந்திரங்கள் இதுவரை வரவில்லை. எனவே அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு குறைந்த விலையில் அறுவடை இயந்திரங்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Farmers
× RELATED திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய...