×

சொத்து குவிப்பு வழக்கில் இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் பறிமுதலை தொடர்ந்து ஜெ., சசிகலா சொத்துக்கள் பறிமுதல்? நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை

சென்னை:கடந்த இரு நாட்களாக இளவரசி, சுதாகரனுக்குச் சொந்தமான பல நூறு கோடி சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்து ஆனால் இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் சொத்துக்களை அரசுடைமை ஆக்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா , உறவினர் இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகிய 4 பேர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, அவரது தம்பி மனைவி இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு  நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதில் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த 2017 பிப்வரி 15ம் தேதி 3 பேரும், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். 


இந்தவேளையில், சசிகலா, இளவரசி ஆகியோரது தண்டனைகாலம் முடிந்து, பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்தனர். பின்னர் நேற்று காலை, அவர்கள் சென்னை புறப்பட்டு இன்று காலை சென்னை வந்தனர். இந்நிலையில், சிறையில் இருந்து விடுதலையான இளவரசி, சிறையில் உள்ள சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான  சொத்துக்களை அரசு உடமையாக்கி, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் ஆயிரம்விளக்கு வாலஸ்கார்டன் பகுதியில் உள்ள கட்டிடங்கள், ராம் நகரில் உள்ள பல கோடி மதிப்புள்ள கட்டிடங்களை சென்னை கலெக்டர் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் தமிழக அரசுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கலெக்டர் சீத்தா லட்சுமி அறிவித்தார்.இந்தநிலையில், காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமா சொத்துக்களை அரசுடைமையாக்கி அறிவித்துள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சொந்தமாக 141.75ஏக்கர் பரப்பளவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 17 வகையான நன்செய் நிலம் உள்ளது. இந்த நிலத்தினை தற்போது மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்து தமிழ்நாடு அரசின் சொத்து என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் டிஆர்ஓ திவ்ய, தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஊத்துக்காடு பகுதிக்குச் சென்று வரைபடத்தை வைத்து நிலப் பகுதிகளை ஆய்வு செய்தனர். இதில் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு, கிதிரிப்பேட்டை பகுதிகளில் சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் பங்குதாரர்களாக உள்ள சுமார் 141.75 ஏக்கர் பரப்பளவுடைய நிலத்தை பறிமுதல் செய்து தமிழக அரசுக்கு சொந்தமானது என அறிவிப்பு செய்து காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் கணக்கில் வைத்தனர். இதன் மதிப்பு சுமார் 300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வாலாஜாபாத் ஊத்துக்காட்டில் மெடோ அக்ரோ பார்ம்ஸ் (பி) லிமிடெட் என்ற பெயரில் 11 சர்வே எண்களில் 12.30 ஏக்கர் நிலம் சுதாகரன், இளவரசி பெயரில் கடந்த 1994 ம் ஆண்டு, டிச.24 ஆம் தேதி வடசென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அதே தேதியில், 9 சர்வே எண்களில் 14.42 ஏக்கர், 12 சர்வே எண்களில் 9.84 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 1995, ஜனவரி 12ம் தேதி 7 சர்வே எண்களில் 6 ஏக்கரும், 30 சர்வே எண்களில் 11.66 ஏக்கர்,  ஜனவரி 13 ம் தேதி 10 சர்வே எண்களில் 9.65 ஏக்கர்,  15 சர்வே எண்களில் 10.29 ஏக்கரும் மெடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் பங்குதாரர்களாக வி.என்.சுதாகரன், இளவரசி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1995, மார்ச் 8ம் தேதி 4 சர்வே எண்களில் 4.22 ஏக்கர், 21 சர்வே எண்களில் 8.65 ஏக்கர் உள்ளிட்ட 141.75 ஏக்கர் சொத்துக்கள் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் உள்ள இந்த நிலங்கள் அனைத்தும் தரிசாகவே உள்ளன. மேற்கண்ட இந்த நிலப் பகுதியில் எந்தவித சுற்றுச்சுவர், தடுப்புகள் எதும் இல்லாமல், எந்தவித விவசாயப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படாமல் தரிசாகவே உள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 6 இடங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சிக்னோரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 15.26 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சவுக்கு தோப்பு நெற்பயிர்கள், தென்னை மரங்கள், பணப்பயிர்கள் மற்றும் தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த இடங்களை கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மதுராந்தகம் ஆர்டிஓ லட்சுமி பிரியா, செய்யூர் தாசில்தார் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரித்தனர். பின்னர், அங்குள்ள மோட்டார் செட்டில் இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என நோட்டீஸ் ஒட்டினர் இதன் மதிப்பு ரூ.15 கோடி எனக் கூறப்படுகிறது.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 315 கோடி ரூபாய் என மதிப்புள்ள சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.


உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும், தீர்ப்பு வழங்கிய பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு மனு தாக்கல் செய்து, அனுமதி வாங்கி இந்த சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 2வது குற்றவாளியான சசிகலா ஆகியோரின் சொத்துக்களை தமிழக அரசு இன்னும் அரசுடைமையாக்கவில்லை. ஜெயலலிதா சொத்துக்களை அரசுடைமையாக்கினால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படலாம் என்று முதலில் தமிழக அரசு கருதியது. ஆனால் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தற்போது சசிகலாவின் வசம்தான் உள்ளன. இதனால் இருவரது சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதில் சென்னை அருகே உள்ள சிறுதாவூர் பங்களா, ஊட்டியில் உள்ள கோடநாடு எஸ்டேட் ஆகியவையும் அடக்கம். இந்த சொத்துக்களை அரசுடைமையாக்குவது குறித்து அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் அதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடும் என்று  தெரிகிறது.



Tags : accumulation ,Sudhakaran ,J. ,Sasikala ,Tamil Nadu ,Government , இளவரசி, சுதாகரன்
× RELATED கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில்...