×

9 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளி கண்டறியவில்லை!: வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை வழக்கு சென்னை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை வழக்கில் 9 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளி யார் என கண்டறியப்படாத நிலையில் வழக்கை சென்னை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த குற்றவியல் வழக்கறிஞர் சங்கரசுப்பு, காணாமல் போன தனது மகனும் சட்டக்கல்லூரி மாணவருமான சதீஷ்குமாரை மீட்டு தார கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2011ம் ஆண்டு ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையில் அவரது சடலம் ஐ.சி.எப் ஏரியில் கண்டறியப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் தொண்டையில் இருந்த அறுபட்ட காயங்களால் ரத்தம் வெளியேறி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி சங்கரசுப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து வழக்கு சென்னை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ஆனால் சி.பி.ஐ விசாரித்து தற்கொலை என அறிக்கை தாக்கல் செய்தது. சி.பி.ஐ சரியான முறையில் விசாரிக்கவில்லை எனவும் தற்கொலை என்ற ரீதியில் வழக்கை முடித்து வைக்க முயற்சிப்பதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டது. சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணையில் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் யார் குற்றவாளி என்பதை கண்டறிய முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தது.

சி.பி.ஐ. தற்கொலை எனவும், சிறப்பு புலனாய்வு பிரிவு கொலை என்றும் முடிவுக்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தற்போது விசாரணையை சென்னை சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளது. வழக்கின் அனைத்து ஆவணங்களையும் எழும்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், ஆதாரங்கள் கிட்டினால் உரிய முறையில் விசாரித்து சட்டத்தின் முன் குற்றவாளியை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


Tags : Sankarasuppu ,Chennai CPCID iCourt , Attorney Sankarasuppu's son murder case, Chennai CPCID, iCourt
× RELATED வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரண...