×

மாரிபுத்தூர்- முருக்கபாக்கம் இடையே காப்புக்காட்டில் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்கள்: போலீசாரின் அலட்சியத்தால் காவலுக்கு செல்லும் கிராம இளைஞர்கள்

செய்யூர்: மாரிபுத்தூர் - முருக்கம்பாக்கம் இடையே காப்புக்காட்டில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்காததால், கிராம இளைஞர்கள் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுராந்தகத்தில் இருந்து மாரிபுத்தூர், முருக்கபாக்கம் செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்த காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த பகுதியில் செல்லும் வாகனங்களை மறித்து வழிப்பறி நடப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக, இரவு பணிக்கு சென்றுவிட்டு பைக்கில் திரும்புகின்றவர்களை குறிவைத்து கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது.
காப்புக்காட்டில் பதுங்கியிருக்கும் மர்ம நபர்கள், பைக் மற்றும் கார்கள் வரும்போது புதரில் இருந்து ஓடிவந்து சுற்றிவளைக்கின்றனர்.

பின்னர் தாங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை வைத்து மிரட்டி செல்போன், பணம் மற்றும் நகைகளைபறித்துக்கொண்டு தப்பிவிடுகின்றனர். நகை, செல்போன்களை கொடுக்க மறுக்கும் நபர்களை வெட்டி காயப்படுத்திவிட்டு பறித்து சென்றுவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறியதாவது; காப்புக்காடு உள்ள சாலையில் சில வருடத்துக்கு முன் மதுக்கடை இருந்தது. மது போதையில் மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுவந்ததால் பல்வேறு போராட்டங்கள் நடத்தி டாஸ்மாக் கடைகளை மூட செய்தோம். இதனால் கஞ்சா போதையில் மக்களை மிரட்டி கொள்ளையடிக்கின்றனர். கடந்த வருடம் கஞ்சா விற்பனை தகராறில் ஒருவரை கொலை செய்து காப்புக்காட்டில் புதைத்தனர்.
காப்புக்காட்டு பகுதியில் மீண்டும் வழிப்பறி அதிகரித்துள்ளது. இதனால் மர்மநபர்களை பிடிக்க கிராம இளைஞர்கள், 24 மணி நேரமும் காப்புக்காட்டில் தங்கியிருந்து கண்காணித்து வருகின்றனர்.

இருப்பினும் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டுகின்றனர். இதனால் காப்புக்காட்டு சாலை வழியாக இரவு நேரங்களில் பயணிக்கவே பயப்படுகின்றனர். காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி போலீசார் தீவிர ரோந்துவந்து கண்காணித்து மர்ம கும்பலை பிடிக்க வேண்டும் என்றனர்.

Tags : incidents ,forest ,Village youths ,Murugapakkam ,Mariputhur , Reserve, trail incidents, village youth
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி