×

118 பேருக்கு முதல்வர் விருது வழங்கும் விழா போலீசாரின் நலனுக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: முதல்வர் எடியூரப்பா உறுதி

பெங்களூரு: கடமை உணர்வுடன் பணியில் ஈடுபடும் போலீசாரின் நலனுக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்று முதல்வர் எடியூரப்பா உறுதி அளித்தார். பெங்களூரு விதானசவுதா வரவேற்பு அரங்கில் சிறப்பாக சேவையாற்றிய போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் விருது நேற்று வழங்கப்பட்டது. உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த விழாவில் 118 பேருக்கு முதல்வர் விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு விருது பெற்ற போலீசார்களுடன் முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, அரசு தலைமை செயலாளர் ரவிக்குமார், மாநில போலீஸ் டிஜிபி பிரவீண் சூட் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக விழாவில் முதல்வர் எடியூரப்பா பேசியதாவது, ``போலீசார், கடமை உணர்ச்சியுடன் பணியாற்றி வருகிறார்கள். உயிரை பொருட்படுத்தாமல் போலீசார் ஈடுபடுகின்றனர். இவ்வாறு கடமை தவறாமல் பணியாற்றும் போலீசாரின் நலன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுப்பதற்கு அரசு தயாராக இருக்கிறது. உங்களின்( போலீசாரின்) துன்பங்களை போக்கும் கடமை அரசுக்கு இருக்கிறது. இதை நான் மறந்து விடமாட்டேன். போலீஸ் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்பது  அரசின் நோக்கமாகும்.

இதன் பொருட்டு மாநில அரசின் சார்பில் ரூ.2500 கோடி செலவில் குடியிருப்புகள் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. 11 ஆயிரம் வீடுகள் போலீசாருக்கு முதல் கட்டமாக வழங்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதவிர 2020-25 போலீசார் வீட்டு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இத்திட்டத்தினால் 2 ஆயிரம் வீடுகள் போலீசார்களுக்கு வழங்கப்படும். கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கு அரசு தயாராக உள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் அரசு எவ்வித சமரசமும் இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்பாக நிர்பயா திட்டத்தின்கீழ் ரூ.662 கோடி செலவில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர உதவிக்கான வாகனங்களை அறிமுகம் செய்தார். பெங்களூருவில் நடந்த விழாவில் 150 வாகனங்கள் ரோந்து பணிக்காக அளிக்கப்பட்டது. இதுதவிர பெண்களின் பாதுகாப்பு பணிகளுக்காக 112 என்ற உதவி மையமும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போலீசார் இன்னும் கூடுதல் கவனத்துடன் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு, பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி தருவது போலீசாரின் முதல் கடமையாக இருக்கவேண்டும்.

போராட்டம் மற்றும் கலவரத்தின் போது போலீசார் உயிர்களை துச்சம் என மதித்து பணியாற்றுகின்றனர். உயிர் பிரியும் என்பது தெரிந்தாலும் தீரத்துடன் போலீசார் பணியாற்றி வருகிறார்கள். போலீசாரின் இந்த தீரத்தை ஒருபோதும் மறக்க முடியாது.விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுகளை கூறிக்கொள்வதுடன் உங்கள் நடத்தை மற்ற போலீசாருக்கு பாடமாக அமையும் என்று நம்புகிறேன். சமுதாயத்தில் காணப்படும் விரோத மனப்பான்மை உள்ளிட்டவை மறையும் வகையில் போலீசாரின் பணிகள் அமையவேண்டும். அதே நேரம் போலீசாரின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை நிறை வேற்றுவதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் எடியூரப்பா பேசினார். போலீசாரின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை நிறை வேற்றுவதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று உறுதி அளிக்கிறேன்.

Tags : Chief Minister ,Eduyurappa ,award ceremony , The Chief Minister's award ceremony for 118 people will be in the interest of the police: Chief Minister Eduyurappa
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...