×

பேருல மட்டும் பளபளப்பு... வேலையில இல்ல சுறுசுறுப்பு...!சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம்

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் ஒரே ஒரு தனி தொகுதியாக சோழவந்தான் உள்ளது. சோழவந்தான் தொகுதியில் கடந்த 2016ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட பவானி கருப்புவை, அதிமுக சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் வென்று எம்எல்ஏ ஆனார். இவர் தேர்தலின்போது தொகுதியில் ஓட்டுக் கேட்டு சென்றபோது, மாணவர்கள், பெற்றோரை ஈர்க்கும் வகையில், ‘‘தொகுதிக்குள் கலைக்கல்லூரி அமைத்து தருவேன்’’ என்றார். விவசாயிகள் பகுதிகளில் வலம் வரும்போதெல்லாம், ‘‘அலங்காநல்லூர் பகுதியில் பழங்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்து தருவேன்’’ என்றார். மேலும், ‘‘அலங்காநல்லூர் பகுதிக்கு வைகை கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவேன். நதிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் சாத்தியார் அணைக்கு வைகை நீரை கொண்டு சென்று அணையில் தண்ணீர் இருப்பு வைப்பேன்’’ என பெரும் திட்டங்களை எல்லாம் வாக்குறுதிகளாக்கி, மக்களிடம் வாக்குகள் கேட்டார். ஆனால் அள்ளி வீசிய வாக்குறுதிகள் அத்தனையுமே நடந்தபாடில்லை.

நிறைவேற்றப்பட்ட ஓரிரு திட்டங்களும், தரமற்றதாகவே இருக்கிறது. இவருக்கும், அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பையாவுக்கும் சுத்தமாக ஒத்துப்போகாது. ஒரு சமூகத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி இவருக்கு எதிராக போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன. மேலும், சோழவந்தான் ரயில்வே மேம்பால பணி சுமார் 10 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. தொகுதியில் பெரும்பாலான சாலைகள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது. முதல்வர், துணைமுதல்வர் பங்கேற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் வீரர்கள் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தன. ஏற்பாடுகளும் எதிர்பார்த்த அளவு இல்லையென மக்கள் கூறுகின்றனர். முதல்வர், துணை முதல்வரை வரவேற்று தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் மாணிக்கம், ஒரு போஸ்டர் கூட ஒட்டவில்லை என்ற பேச்சு அதிமுகவினர் மத்தியிலேயே கடுமையாக எழுந்தது. ‘பேருதான் பளபளக்கும் மாணிக்கம்னு வச்சிருக்காரு... சுறுசுறுப்பாக செயல்படாம போனதால தொகுதியே பல் இளிக்குதுங்க’ என மக்கள் புலம்புகின்றனர்.

புதிய நீதிமன்ற கட்டிடம் கொண்டு வந்திருக்கிறேன்
சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் கூறும்போது, ‘‘நான் தொகுதியில் எம்எல்ஏவாக பதவி ஏற்ற பின், தற்போது வரை சுமார் 296 கிமீ அளவிற்கு சாலை வசதிகள் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். வாடிப்பட்டியில் புதியதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம், சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்களையும் கொண்டு வந்துள்ளேன். புதிதாக தீயணைப்பு நிலையம் அமைத்திருக்கிறேன். வாடிப்பட்டி மற்றும் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பஸ் ஸ்டாண்ட்கள் கட்டப்பட்டுள்ளன. சோழவந்தான், பாலமேடு பேரூராட்சிகளில் நவீன காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணாபுரம், மறவபட்டி, தேனூர் உள்ளிட்ட 6 இடங்களில் மினி கிளினிக் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார்.

தனது கம்பெனிக்காகவே சாலை போடும் எம்எல்ஏ
திமுக வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பிரகாஷ் கூறும்போது, ‘‘சோழவந்தான் எம்எல்ஏவின் அதிகப்படியான சாதனையே சாலை அமைப்பது மட்டுமே. சொந்தமாக அவர் தார் பிளாண்ட் வைத்துள்ளதால், சாலை அமைக்கும் திட்டத்தில் மட்டுமே கூடுதல் கவனம் காட்டுகிறார். தொகுதிக்குள் தெருவிளக்கு, குடிநீர், கழிப்பிட வசதிகள் சார்ந்து எந்த பணியும் செய்யவில்லை.  ஜெயலலிதா ஆட்சியில் மூடப்பட்ட பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவரே 110 விதியின் கீழ் அறிவித்தார். ஆனால், தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆலை ஓடாததால் இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்’’ என்றார்.

Tags : world ,constituency ,MLA , Agility is not only yours glow ... his work ...! Colavantan constituency MLA gem
× RELATED ஆந்திர சட்டமன்ற தேர்தல் : தாக்கிய எம்.எல்.ஏ., பதிலுக்கு அறைந்த வாக்காளர்!