×

இணையதளம் மூலம் தானாக பட்டா மாறுதல் திட்டம்: 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது

சென்னை: இணையதளம் மூலம் தானாக பட்டா மாறுதல் திட்டம் விழுப்புரம், வேலூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு ஸ்டார் 2.0 மென்பொருள் திட்டத்தை கொண்டுவந்தது. அதில் அசையா சொத்து குறித்த உரிமை மாற்றம் செய்யப்படும் ஆவணப்பதிவுகளின் போது சர்வே எண் உட்பிரிவு செய்ய தேவை எழாத சொத்துக்கள் ஆவணப்பதிவு முடிந்தவுடன் சார்பதிவாளர் கணினிவழி ஒப்புதல் வழங்கிடுவதை முற்றிலும் இணையவழியாக பட்டா மாற்றம் மேற்கொள்ளப்படுவதை நடைமுறைப்படுத்திட அரசு ஒப்புதல் வழங்கி ஆணையிட்டது. சோதனை அடிப்படையில் செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்பதிவகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 10 மாவட்டங்களில் இத்திட்டம் நேற்று முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பதிவுத்துறை தலைவர் அனைத்து மாவட்ட சார்பதிவாளர்களுக்கு  அனுப்பிய சுற்றறிக்கை:  அசையாச் சொத்து பொறுத்த ஆவணம் எழுதிக் கொடுத்த நபரின் பெயரும், ஏற்கனவே வழங்கப்பட்ட இணையவழி பட்டாவில் கண்டுள்ள நில உரிமையாளர் பெயரினையும் ஒப்பீடு செய்து இரண்டும் ஒன்றாக இருக்கும் நிகழ்விலேயே தானாக பட்டா மாறுதல் குறித்த ஒப்புதல் குறியீடு சார்பதிவாளரால் வழங்கப்பட வேண்டும்.  இணையவழி சிட்டாவில் கண்ட பட்டாதாரர் இறந்த வாரிசுதாரர்களால் ஆவணம் எழுதிக் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட்டுப்பட்டாடி பட்டாதாரர் பெயரும் ஆவணத்தில் கண்ட விற்பனை செய்பவரின் பெயரும் ஒன்றாக இல்லாமல் மாறுபட்ட நிலையில் தானாக பட்டா மாறுதலுக்கு சார்பதிவாளரால் ஒப்புதல் வழங்குவது தவறானது.

செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தை தொடர்ந்து தானாக பட்டா மாறுதல் நடைமுறை பெரம்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருப்பூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், திருவாரூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு 8.2.2021 முதல் விரிவுபடுத்தப்படுகிறது. உரிய கவனமின்றி அரசின் திட்டத்திற்கு குந்தமாக சார்பதிவாளர்கள் செயல்படுவது பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு தெரியவந்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Tags : districts , Automatic belt change scheme through website: Expanded to 10 districts
× RELATED இரக்கம் காட்டாத வெயில்; தமிழ்நாட்டில்...