×

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 315 கோடி சொத்துகள் பறிமுதல்

சென்னை: இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்த ரூ.315 கோடி சொத்துகள் அரசுடமை ஆக்கப்பட்டதாக இரு மாவட்ட கலெக்டர்களும் நேற்று அறிவித்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா  உள்பட 4 பேர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, அவரது தம்பி மனைவி இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு  நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. கடந்த 2017  பிப்வரி 15ம் தேதி 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில்  அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சசிகலா, இளவரசி ஆகியோரது தண்டனை  காலம் முடிந்தது. இதனால் நேற்று காலை, அவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்னைக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு அமமுக சார்பில்,  வழி நெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிறையில் இருந்து  விடுதலையான இளவரசி, சிறையில் உள்ள சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்களை அரசு உடமையாக்கி, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தை அரசுடமையாக்க முடிவு செய்தார். இதனால் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் டிஆர்ஓ திவ்ய, தாசில்தார் வெங்கடேசன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஊத்துக்காடு பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். இதில் ஊத்துக்காடு, கிதிரிப்பேட்டை பகுதிகளில் சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் பங்குதாரர்களாக உள்ள சுமார் 141.75 ஏக்கர் பரப்பளவுடைய நிலத்தை பறிமுதல் செய்து தமிழக அரசுடமையாக்கினர். இதன் மதிப்பு சுமார் 300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வாலாஜாபாத் ஊத்துக்காட்டில் மெடோ அக்ரோ பார்ம்ஸ் (பி) லிமிடெட் என்ற பெயரில் 11 சர்வே எண்களில் 12.30 ஏக்கர் நிலம் சுதாகரன், இளவரசி பெயரில் 1994 ம் ஆண்டு, டிச.24ம் தேதி வடசென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே தேதியில், 9 சர்வே எண்களில் 14.42 ஏக்கர், 12 சர்வே எண்களில் 9.84 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 1995, ஜனவரி 12ம் தேதி 7 சர்வே எண்களில் 6 ஏக்கரும், 30 சர்வே எண்களில் 11.66 ஏக்கர்,  ஜனவரி 13 ம் தேதி 10 சர்வே எண்களில் 9.65 ஏக்கர்,  15 சர்வே எண்களில் 10.29 ஏக்கரும் மெடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட் பங்குதாரர்களாக வி.என்.சுதாகரன், இளவரசி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1995, மார்ச் 8ம் தேதி 4 சர்வே எண்களில் 4.22 ஏக்கர், 21 சர்வே எண்களில் 8.65 ஏக்கர் உள்ளிட்ட 141.75 ஏக்கர் சொத்துக்கள் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 6 இடங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சிக்னோரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 15.26 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் தோட்டம் மற்றும் பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த இடங்களை கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரித்தனர். பின்னர், அங்குள்ள மோட்டார் செட்டில் இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என நோட்டீஸ் ஒட்டினர் அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்களின் விவரம் வருமாறு: செய்யூர் ஆ.கிராமத்தில் 10 சர்வே எண்ணில் 15.26 ஏக்கர் நிலம் உள்ளது.

இதன் மதிப்பு இதன் மதிப்பு ரூ.15 கோடி. இதை செங்கல்பட்டு கலெக்டர் அரசுடமையாக்கி உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 315 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. கடந்த இரு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குச் சொந்தமான நிலங்கள் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அரசுடைமையாக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sudhakaran ,Kanchipuram district ,Walajabad , 315 crore assets belonging to Princess Sudhakaran seized near Walajabad in Kanchipuram district
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...