திருவொற்றியூர் மண்டலத்தில் செயல்படும் அம்மா உணவகங்களில் தரமற்ற உணவு: பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2013ம் ஆண்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். பின்னர் படிப்படியாக அனைத்து வார்டுகளிலும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இங்கு மலிவு விலையில் இட்லி, பொங்கல், சப்பாத்தி, கறிவேப்பிலை சாதம், தயிர் சாதம் போன்றவை பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின் இந்த அம்மா உணவகங்களை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், உணவுகள் தரமாக இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மணலி மண்டலத்தில் உள்ள 7 வார்டுகளில் 16 அம்மா உணவகங்கள் உள்ளன. இங்கு சுமார் 130 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமீப காலமாக இந்த மண்டலத்தில்  உள்ள அம்மா உணவகங்களில் சமைக்கப்படும் உணவு சுகாதாரமற்ற முறையிலும், சுவையின்றியும் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள் இங்கு சாப்பிட ஆர்வம் காட்டாததால் படிப்படியாக இந்த உணவகங்களில் விற்பனை குறைந்து வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் சமைப்பதற்கு தேவையான பொருட்களை அம்மா உணவக பணியாளர்கள் தினசரி நேரடியாக மளிகை கடை, மற்றும் காய்கறி கடைகளில் இருந்து  நேரடியாக வாங்கி பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை மாற்றப்பட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் இருந்து மாநகராட்சி அதிகாரிகள்  காய்கறி, பருப்பு, எண்ணெய் போன்றவைகளை வாங்கி, அம்மா உணவகங்களுக்கு விநியோகித்து  வருகின்றனர். இவ்வாறு வினியோகிக்கப்படும்  மளிகை பொருட்கள் தேவையான அளவிற்கு கொடுக்காமல் குறைந்த அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.  

மேலும்,  அழுகிப்போன  காய்கறிகள், புளித்துப் போன தயிர், பூச்சிகள் நிறைந்த பருப்பு போன்றவைகளையும் அதிகாரிகள் அம்மா உணவக  ஊழியர்களிடம்  கொடுத்து அதை சமைக்கும்படி கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால், உணவில் சுவை குறைவாக உள்ளது. இந்த தரம் இல்லாத உணவை உண்பதற்கு பொதுமக்கள் வராததால் பல உணவகங்களில் விற்பனை குறைந்து சமைத்த உணவு வீணாகி கீழே கொட்டப்படும் நிலை உள்ளது. தரமற்ற காய்கறி மற்றும் மளிகை பொருட்களை அம்மா உணவகங்களில் வழங்குவதன் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் இந்த அம்மா உணவகத்தை அதிகாரிகள் முறையாக பராமரித்து, தரமான உணவு வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊழியர்கள் குமுறல்

விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஏழை பெண்கள் ஆகியோர் அம்மா உணவகங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக ரூ.9 ஆயிரம் மட்டும் மாத ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஊழியத்தை வைத்து கொண்டு குடும்பம் நடத்த முடியவில்லை எனவும், ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் அம்மா உணவக பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், தங்களை பணி நிரந்தரம் செய்ய செய்ய வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால், இதுவரை  எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

>