×

சசிகலா இன்று சென்னை வருகை: அதிமுகவில் குழப்பம் அதிகரிப்பு: அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை கூடுகிறது: முக்கிய தலைவர்களுடன் பேச்சு: அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள சசிகலா இன்று மாலை சென்னை வருகிறார். அவரின் வருகை அதிமுகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவின் வருகையை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த ஜனவரி 27ம் தேதி விடுதலையானார். அவர் விடுதலை ஆவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பாக கொரோனா தொற்று ஏற்பட்டது. தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து வெளியே வந்தார். அப்போது அதிமுக கொடி கட்டிய ஜெயலலிதா பயன்படுத்திய காரில் பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றார்.
சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் பண்ணை வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்தார்.

இந்தநிலையில், பிப்ரவரி 7ம் தேதி சசிகலா சென்னை திரும்புவதாக இருந்தது. ஆனால், அவர் சென்னை திரும்பும் தேதி மாற்றியமைக்கப்பட்டு 8ம் தேதி சென்னை திரும்புவார் என டிடிவி.தினகரன் அறிவித்தார். சசிகலா, பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது 10 அதிமுக எம்.எல்.ஏக்கள் நேரடியாக சென்று அவரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதேபோல், சில அமைச்சர்களும் சசிகலாவுடன் தொலைபேசி மூலம் பேசி உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் தெரிகிறது. இது அதிமுக தலைமைக்கு தெரியவரவே கட்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், சசிகலாவிற்கு ஆதரவாக திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகிகளை எடப்பாடி, ஓபிஎஸ் ஆகியோர்கட்சியில் இருந்து நீக்கினர். மேலும், கட்சி தலைமைக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

அதிமுக தலைமையின் இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அதிமுக முக்கிய நிர்வாகிகள் சிலர் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதில், மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 2 அமைச்சர்கள், தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சர் என 3 பேரை சசிகலா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ‘நான் சசிகலா பேசுகிறேன். எப்படி இருக்கீங்க அமைச்சரே’ என்று கூறியுள்ளார். சசிகலாவின் குரலை கேட்ட அந்த 3 அமைச்சர்களும் பதற்றத்தில் உறைந்துபோயுள்ளனர். பின்னர், என்ன பேசுவதென்று தெரியாமல் அமைச்சர்கள் 3 பேரும் சசிகலாவின் இணைப்பை துண்டித்துள்ளனர். இது அமைச்சர்களின் நெருங்கிய நண்பர்களுக்கு தெரியவரவே அவர்கள் அதிமுக தலைமைக்கு சசிகலா பேசியது குறித்து தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, அதிமுக தலைமை குறிப்பிட்ட அந்த 3 அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளது. அப்போது, அவர்கள் மழுப்பலாக பதில் அளித்துள்ளதாக தெரிகிறது.
பின்னர், கட்சிக்கு எதிராக செயல்பட வேண்டாம் என்று அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேபோல், அதிமுக எம்.எல்.ஏக்களையும் சசிகலா தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிகிறது. இதனால், அதிமுகவில் அதிருப்தியாளர்களின் எண்ணிக்கையும், சசிகலா ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், சசிகலா இன்று காலை 9 மணிக்கு பெங்களூரில் இருந்து அதிமுக கொடி கட்டப்பட்ட ஜெயலலிதாவின் காரில் புறப்படுகிறார். அவருடன் இணைந்து டிடிவி.தினகரன் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் தங்களுடைய காரில் சசிகலாவை பின்தொடர்ந்து வருவார்கள்.

சசிகலாவை வரவேற்க தமிழக எல்லையான ஓசூரில் இருந்து சென்னை வரை மொத்தம் 56 இடங்களில் அமமுக சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து சென்னை வரும் சசிகலாவிற்கு அந்தந்த மாவட்ட, பகுதி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர். அதன்படி, மாலை 5.30 மணிக்கு சசிகலா சென்னை வந்தடைவார். அவர் சென்னை வந்ததும் ஜெயலலிதா நினைவிடம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா நினைவிடத்தில் தற்போது எஞ்சிய பணிகள் நடந்து வருவதால் அவர், காமராஜர் சாலையில் இருந்தபடி ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி கும்பிட்டு பின்னர் தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா இல்லம் செல்வார் என்று தெரிகிறது. இதேபோல், சென்னை திரும்பும் சசிகலா அதிமுக தலைமை அலுவலகம் செல்வார் என்ற தகவலால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் அதிமுக அலுவலகத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், அவ்வழியாக செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Sasikala ,Chennai ,AIADMK , Sasikala, attendance, AIADMK, chaos, police, concentration
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...