×

பெட்ரோல், டீசல், எல்பிஜி விலை தினம் தினம் அதிகரிப்பு: ஷேர்ஆட்டோ கட்டணம் ரூ20 உயர்வு

* காய்கறி விலையும் 20 சதவீதம் கூடுகிறது
* பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிப்பு

சென்னை: ஆட்டோக்களுக்கான எல்பிஜி சிலிண்டர், டீசல், பெட்ரோலின் விலை தொடர்ந்து ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் ஷேர் ஆட்டோ கட்டணமும் அதிகரித்துள்ளது. மேலும் லாரி வாடகை உயர்வதால் காய்கறி விலையும் 20 சதவீதம் உயர்கிறது. இதனால் பல்வேறு தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போக்குவரத்து வாகனங்களான வேன், மேக்ஸி கேப், ஷேர் ஆட்டோ, ஆட்டோ, கார் என 12.30  லட்சத்திற்கும் மேற்பட்டவை பயன்பாட்டில் உள்ளன. இதில், ஆட்டோக்களின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் சுமார் 4.50 லட்சம் ஆட்டோக்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை முன்பு டீசல் மற்றும் பெட்ரோலில் தான் இயங்கி வந்தது. அப்போது அதிகப்படியாக நச்சுகலந்த புகை வெளியேறி சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஒரு காரணமாக இருந்தது.

எனவே இந்த பாதிப்பை குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசலுக்கு  பதிலாக எல்பிஜி எனப்படும் எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களை இயக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி எல்பிஜியில் இயக்கும் ஆட்டோக்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் இயங்கும் ஆட்டோக்களில் சுமார் 75 சதவீதத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் எல்பிஜி முறையிலேயே இயங்குகிறது. இந்த ஆட்டோக்களில் எல்பிஜி மட்டும் இல்லாமல், அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் பெட்ரோலில் இயங்கும் வகையிலான வசதியும் செய்யப்பட்டுள்ளது. முன்பு ஆட்டோக்களில் பயன்படுத்தப்படும் எல்பிஜியின் விலை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் போல எல்பிஜியின் விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு மாதத்தில் ரூ4.9 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் ஒரு கிலோ ரூ.49.45க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் டீசல் நேற்று முன்தினம் (5ம் தேதி) ஒரு  லிட்டர் ரூ.82.33க்கு விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.89.39ஆக இருந்தது. இவ்வாறு நாளுக்கு, நாள் அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலையால் சென்னையில் ஷேர் ஆட்டோக்களின் விலை, பெரும்பாலான வழித்தடங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பூந்தமல்லி-போரூர் வரையில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களில் 30 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இதேபோல் திநகர்-மைலாப்பூர், வேளச்சேரி-திருவாண்மியூர் போன்ற வழித்தடங்களிலும் கட்டணத்தை உயர்த்த, ஆட்டோ ஓட்டுனர்கள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக குறைவான பஸ்களே இயக்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான மக்கள் ஷேர் ஆட்டோக்களையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஷேர் ஆட்டோக்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தினந்தோறும் ஏறுமுகத்தில் இருக்கும் எல்பிஜி, டீசல், பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜூட்மேத்யூ கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 4.50 லட்சம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. சென்னையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளது. ஐடி நிறுவனங்களை நம்பியே எங்களது தினசரி வருவாய் இருந்து வந்தது. இதற்குள் கொரோனா பரவல் காரணமாக, ஐடி நிறுவனங்கள் செயல்படவில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஆட்டோக்களுக்கான எல்பிஜியின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு மாதத்தில் கிலோவுக்கு ரூ.4.9 வரை உயர்ந்துள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம்.

ஆட்டோக்களில் ஒரு ஸ்டாப்பிங்கிற்கு (2 முதல் 2.5 கி.மீ வரை) ரூ.7 முதல் ரூ.10 வரை வசூல் செய்யப்பட்டு வந்தது. இதனை எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக ரூ.15 முதல் ரூ.20 வரை உயர்த்தியுள்ளோம். இதேபோல் வாடகை கார்களுக்கான  விலையும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். காய்கறி விலை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் மேலும் கட்டண உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வால், காய்கறி, பழங்களின் விலைகள் 20 சதவீதம் வரை அடுத்த வாரம் உயர்த்தப்பட உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் காய்கறி, பழங்கள் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags : Petrol, diesel and LPG prices rise by Rs 20 a day
× RELATED கடலில் கலந்து மழைநீர் வீணாவதை தடுக்க...