×

மழைநீர் வடிகால் வழித்தடங்கள் தொடர்பாக ஜிஐஎஸ் வரைபடம்: மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் செல்லும் வழித்தடங்கள் தொடர்பாக ஜிஐஎஸ் வரைபடம் தயாரிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் 1894 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து கோவளம், அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு என 4 வடிநில பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அடையாறு மற்றும் கூவம் வடிநில பகுதிகளில் உலக வங்கி நிதி உதவியுடன் 500 கிலோ மீட்டர் நீளத்துக்கு மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது.

கொசஸ்தலையாறு வடி நிலப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.2,800 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவுள்ளது. தென்சென்னை பகுதியில் கோவளம் வடி நில பகுதியில் ரூ.3,500 கோடி செலவில் ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதை தவிர்த்து சென்னை மாநகராட்சியில் உள்ள 210 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டங்கள் தொடர்பான தகவல்கள் எதிர் காலத்திற்கு தேவைப்படும் வகையில் மழைநீர் வடிகால்கள் செல்லும் வழித்தடங்கள் தொடர்பாக ஜிஐஎஸ் வரைபடம் தயாரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் ஜிஐஎஸ் முறை பல்வேறு திட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சொத்துவரி கணக்கீடு செய்ய சென்னையில் உள்ள கட்டிடங்கள் ஜிஐஎஸ் முறையில் வரைபடமாக தயாரிக்கப்பட்டது. இதனால் பல கட்டிடங்கள் குறைவான சொத்துவரி கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு ஜிஐஎஸ் வரைபடம் தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்யதுள்ளது.
இதன்படி தற்போது மழைநீர் வடிகால் இணைப்பு தொடர்பாக ஜிஐஎஸ் வரைபடம் தயார் செய்யப்படவுள்ளது. சென்னையில் முக்கிய உட்கட்டமைப்பு பணிகளில் மழைநீர் வடிகால் திட்டம் முக்கியமானது. எப்போதும் மழைநீர் வடிகால் தொடர்பான பணிகள் செய்யப்பட்டு கொண்டே இருக்கும். எனவே இந்த பணிகளுக்காக இந்த வரைபடம் தயார் செய்யப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினர்.

Tags : GIS Map of Rainwater Drainage Routes: Corporation Project
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...