×

குளச்சலில் புதருக்குள் அழியும் அரசு தும்பு ஆலை: நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த கோரிக்கை

குளச்சல்: குளச்சலில் புதர் சூழ்ந்து அழியும் நிலையில் காணப்படும் அரசு தும்பு ஆலை வளாகம் தரிசு நிலமாக மாறி வருகிறது. இதனை நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குளச்சல் துறைமுக நகரம் பெரும் சிறப்புற்று விளங்கியது. அப்போது குமரி மாவட்டத்தில் அமோகமாக நடைப்பெற்ற தொழில்களில் பனைத்தொழிலும் ஒன்று. பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கு, பதனீர், பனங்காய், பனங்கிழங்கு ஆகியவை தவிர மக்கள் அன்றாடம்  பயன்படுத்தும் கட்டில், பாய், வீட்டு உத்திரம் போன்றவைகள் செய்வதற்கு பனை ஓலை, மட்டை, தடி, நார்கள் பெரிதும் பயன்பட்டது.

மேலும் பனை மர  மட்டையிலிருந்து நார் எடுத்து அதில் வணிக ரீதியாக தும்பு தயாரிக்கும் தொழில் நுட்பத்தை ஆங்கிலேயர் தொடங்கினர். இந்த தும்பு  தொழிலுக்கு என சுமார் 300 வருடங்களுக்கு முன்பே ஆங்கிலேயே அரசு குளச்சல் துறைமுக பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் ஆஸ்பின்வால் என்ற பெயரில்  தும்பு ஆலை ஒன்றை நிறுவியது. குளச்சல் சுற்று வட்டாரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மக்கள் இங்கு கொண்டு வரும் மூலப் பொருளான பனை நார்களை ஆலை நிர்வாகத்தினர்  வாங்கி, பின்னர் தும்புகளாக தரம் பிரித்து ‘பிரஸ்’ கட்டைகள் தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.

பனை நார்களை தும்புகளாகவும், பிரஸ்களாவும் உற்பத்தி செய்ய இங்கிலாந்திலிருந்து உயர் தர இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தும்பு, பிரஸ்கள் ஜப்பான், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 16 நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இவை குளச்சல், தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்கள் வழியாக கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட இந்த தும்பு ஆலை பின்னர் கேரள மாநிலம் ஆலப்புழாவிலிருந்து நிர்வகிக்கப்பட்டது. பின்னர் 1965 ல் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் லிமிடெட்டாக மாறியது.

அப்போது 600 தொழிலாளர்களும், 15 அலுவலர்களும் வேலை வாய்ப்பு பெற்றனர். மாவட்டம் முழுவதிலிருந்து பனை மரம் சார்ந்த தொழிலாளர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் பயனடைந்தனர். பின்னர் ஆலை நாளுக்கு நாள் நலிவடைய தொடங்கியது. மூலப்பொருட்கள் கிடைக்காமலும், தனியார் தும்பு ஆலைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமலும் உற்பத்தி குறைந்தது. இதற்கு அதிகாரிகளின் நிர்வாக திறன் இன்மையும் ஒரு காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர். இறுதியாக ஒரே ஒரு ஊழியர் வேலை பார்த்து வந்த இந்த ஆலை கடந்த 2005ல் மூடப்பட்டது. தற்போது 4.11 ஏக்கர் பரப்பு உள்ள இந்த ஆலை வளாகம் புதுருக்குள் மறைந்து காணப்படுகிறது. கட்டிடங்கள் உடைந்து பாழடைந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளம் வழிந்தோட முடியாமல் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தி ஆகும் சாக்கடையாக மாறியுள்ளது. விஷ ஜந்துக்களும் காணப்படுவதால் இதனை சுற்றியுள்ள வீட்டினர்கள் காம்பவுண்டில் வலை போட்டு வைத்துள்னர். தரிசு நிலமாக மாறியுள்ள இந்த தும்பு ஆலை வளாகத்தை அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கலைஞர் பெயரில் விளையாட்டரங்கம்
குளச்சல் துறைமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு மீனவர்களிடையே பேசினார். அப்போது மீனவர்கள் சார்பில் குளச்சல் தூய காணிக்கை அன்னை ஆலய பங்குத்தந்தை மரிய செல்வன் பாழடைந்துள்ள இந்த தும்பு ஆலை வளாகத்தை சீரமைத்து இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் பெயரில் ஒரு விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Government sorghum plant ,bush ,Kulachal , Government sorghum plant perishing in the bush in Kulachal: Demand for use in welfare schemes
× RELATED கள்ளக்கடல் எச்சரிக்கை எதிரொலி...