×

தற்போதைய அதிமுக கட்சி மோடி, அமித்ஷாவையே சார்ந்திருக்கிறது: கூட்டணிக்கு முழுக்கு: மஜக பொது செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நீங்கள், தனியரசு, கருணாஸ் ஆகிய 3 பேரும் ரகசியம் கூட்டம் நடத்தியதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறதே?
நாங்கள் மூவரும் நண்பர்கள். அரசியல் வேறு, எங்களுடைய நட்பு என்பது வேறு. எம்எல்ஏ ஹாஸ்டலில் எனது ரூமில் இருந்து 3வது ரூம் தான் கருணாஸ் ரூம். பக்கத்துக்கு பில்டிங் தான் தனியரசின் ரூம். இன்று(நேற்று) ஒன்றாக தான் சாப்பிட்டோம். அதே நேரத்தில் அரசியல் ரீதியாக மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு நிலைப்பாடு உள்ளது. அவர்களுக்கும் தனி நிலைப்பாடு இருக்கும். அதில் யாரும் குழம்பிக் கொள்ள மாட்டோம். மொத்தத்தில் இது ரகசிய சந்திப்பே இல்லை.

3 பேருக்கும் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் சீட் வழங்கப்படாது என்று அதிமுக தரப்பில் சொல்லி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறதே?
எங்களை பொறுத்தவரைக்கும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம். இதை அறிவித்தும் இருக்கிறோம். அப்படியிருக்கும் போது எங்களுக்கு அவங்க எப்படி சீட் மறுக்கிறார்கள், தருகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் தான் வெளியேறி விட்டோமே. மற்ற 2 பேரின் நிலைமை என்னவென்று எனக்கு தெரியவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த காலக்கட்டத்தில் தமிழகத்தின் நலன்களையும், தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஒரு அரசியல் ஆளுமையாக இருந்தார். இப்போதைய அதிமுக தலைமை என்பது ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் இருந்து மாறி மோடி, அமித்ஷாவையும், மத்திய அரசை சார்ந்து சிந்திக்கக்கூடிய நிலையாக மாறி விட்டது. தமிழர்களின் நலனையும், தமிழ்நாட்டின் நலனையும் விட்டுக் கொடுக்கக்கூடிய போக்கு அவர்களிடம் இருக்கக்கூடிய காரணங்களால் தான். இதில் நான் கடுமையாக முரண்படுகிறேன். எதிர்க்கிறேன்.

உங்கள் 3 பேரையும் திடீரென வந்த எம்எல்ஏக்கள் என்ற பேச்சு அடிபடுகிறதே? நான் 1990 முதல் பொதுவாழ்வில் இருக்கிறேன். 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறேன். அதன் பிறகு, தனிக்கட்சியை தொடங்கி அதிமுகவுடன் இடம் பெற்று 2016ல் எம்எல்ஏவாகியிருக்கிறேன். எனவே, 30 ஆண்டுகாலம் பொது வாழ்வும், மிகப்பெரிய அதிமுக கூட்டணியில் இருந்து தோல்வியை பெற்று அந்த அனுபவத்துடன் நடந்து வந்திருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் பின்னாலும் உழைப்பும், தியாகமும், அனுபவமும் இருக்கிறது. எனவே, திடீரென்று வந்து விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

கூவத்தூரில் நடந்த நிகழ்வுகளில் 3 பேரும் பெரிய அளவில் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறதே? நான் அந்த குற்றச்சாட்டு வந்தவுடன் பகிரங்கமாக சவால் விட்டேன். பகிரங்கமாக மறுத்தேன். எங்கள் கட்சியின் சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் கூவத்தூருக்கு போகாமல், அந்த சம்பவங்களை கண்டித்தும், எதிர்த்தும், எனது கட்சி அலுவலகத்தில் சகநிர்வாகிகளோடு பேட்டி அளித்து கொண்டிருந்தது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டநிலையில் அங்க நடந்த நிகழ்வுகளுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த குற்றச்சாட்டை மறுத்து, பகிரங்க விவாதத்திற்கும் தயார் என்றும் சொல்லியிருந்தேன். மற்ற 2 பேரும் என்ன செய்தாார்கள் என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

Tags : AIADMK ,Tamimun Ansari MLA ,Modi ,Amit Shah: Immerse ,Majha , AIADMK, Modi, Majha, General Secretary, Tamimun Ansari
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...