×

செஸ் வரி அறிமுகம் எதிரொலியாக ரூ.90ஐ நெருங்கியது பெட்ரோல் விலை

சென்னை:செஸ் வரி எதிரொலியாக பெட்ரோல் விலை இன்று ஒரு லிட்டர் ₹90ஐ தொட்டது. டீசல் விலையும் ஏறு முகத்தில் உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ₹1,375 ஆக வீழ்ச்சி அடைந்து. பின்னர், மே மாதம் முதல் மீண்டும் உயரத்துவங்கியது. இதன் காரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்தநிலையில், கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, வேளாண்துறையை மேம்படுத்துவதற்காக வேளாண் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான செஸ் வரி அறிமுகப்படுத்தப்படுவதாகவும், பிப்ரவரி 2ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வருவதாகவும் கூறினார். இதன்மூலம் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ₹2 ரூபாயும், டீசலுக்கு லிட்டருக்கு ₹4 ரூபாயும் வேளாண் செஸ் வரி விதிக்கபட உள்ளது என தெரிவித்தார்.அந்தவகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்று முதல் உயரத்தொடங்கியது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹88.82 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ₹81.71 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்தநிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் 89.13 ரூபாய்க்கும், டீசல் விலையில் 33 காசுகள் உயர்ந்து 82.04 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்த விலை உயர்வு காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து ₹90ஐ தொட்டதுள்ளதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



Tags : introduction , பெட்ரோல் விலை
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...