அதே இடம், அதே சட்டை, அதே பைக் சென்டிமென்ட்டால் சிக்கிய செல்போன் திருடன்

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல், அஷ்டலட்சுமி நகர் பகுதியில் நேற்று முன்தினம் 2 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இது குறித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அந்தப்பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடினர். இந்த நிலையில் அஷ்டலட்சுமி நகர் போலீஸ் பூத் அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்தவரை மடக்கி விசாரித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியில் இருந்த அதே நபர், அதே சட்டையுடன், அதே பைக்கில் வந்திருப்பதும் தெரியவந்தது. விசாரணையில் போரூரை சேர்ந்த மோகன் (32) என்பதும், சரியான வேலை கிடைக்காததாலும், போதிய வருமானம் இல்லாததாலும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

மேலும் இதே பகுதியில் 2 செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டும் போலீசில் சிக்கவில்லை. அந்த சென்டிமென்ட் காரணமாக மீண்டும் அதே பகுதியில் அதே சட்டை அணிந்து கொண்டு அதே பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபட வந்ததாக போலீசில் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது சென்டிமென்ட் ஒர்க்அவுட் ஆகாமல் போலீசில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து மதுரவாயல் போலீசார் மோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். எத்தனையோ திருடர்களை பிடித்துள்ளோம். ஆனால் சென்டிமென்ட் திருடனை இப்போதுதான் பிடித்துள்ளோம். சென்டிமென்ட் மட்டுமல்ல, கடவுள்கூட தவறு செய்பவர்களுக்கு உதவி செய்ய மாட்டார் என்று அந்த திருடனுக்கு புத்திமதி கூறி சிறைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories: