×

வெஸ்ட் இண்டீசுடன் முதல் டெஸ்ட் வங்கதேசம் நிதான ஆட்டம்

சாட்டோகிராம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், வங்கதேசம் 5 விக்கெட் இழப்புக்கு 242 ரன் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, அந்த அணி 0-3 என்ற கணக்கில் இழந்து ஒயிட் வாஷ் ஆனது.அடுத்து, இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. சாட்டோகிராமில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில், ஒருநாள் தொடரைப் போலவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 வீரர்கள் அறிமுகமாயினர்.

பேட்டிங் வரிசையை பலப்படுத்தும் வகையில் பேட்ஸ்மேன் ஷாயன் மோஸ்லி, ஆல்ரவுண்டர்கள் நக்ருமா போனர், கேல் மேயர் ஆகியோர் ஆடும் அணியில்  புதிதாக இடம் பிடித்தனர். டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ஷத்மன் இஸ்லாம், தமிம் இக்பால் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். தமிம் இக்பால் 9 ரன் எடுத்து ரோச் வேகத்தில் கிளீன் போல்டானார். ஷத்மன் - நஜ்மல் உசைன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தனர். நஜ்முல் 25 ரன் எடுத்து ரன் அவுட்டானார். அடுத்து ஷத்மன் - கேப்டன் மோமினுல் ஹக் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தனர். மோமினுல் ஹக் 26 ரன் எடுத்து வாரிகன் பந்துவீச்சில் கேம்ப்பெல் வசம் பிடிபட்டார்.

பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த ஷத்மன் 59 ரன் (154 பந்து, 6 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார். ஓரளவு தாக்குப்பிடித்த முஷ்பிகுர் ரகிம் 38 ரன் எடுத்து வெளியேற, வங்கதேசம் 193 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து சற்று தடுமாறியது. இந்த நிலையில், ஷாகிப் அல் ஹசன் - லிட்டன் தாஸ் ஜோடி உறுதியுடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 242 ரன் எடுத்துள்ளது (90 ஓவர்). ஷாகிப் 39, லிட்டன் தாஸ் 34 ரன்னுடன் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிகன் 3, கெமர் ரோச் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.இன்னும் 5 விக்கெட் கைவசம் இருக்க, 2வது நாளான இன்று வங்கதேசம் முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடும்.

Tags : Bangladesh ,Test ,West Indies , Bangladesh play first Test against West Indies
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...