×

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் அதிமுக எம்எல்ஏ குடும்பத்தினருக்கு விதிகளை மீறி டெண்டர் ஒதுக்கீடா? மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

மதுரை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கருப்பூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக திருச்சி மாவட்டத்திற்கு ரூ.38.13 கோடி  ஒதுக்கப்பட்டது. இதில், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 11 ஊராட்சிகளுக்கு ரூ.3.38 கோடியும், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 12 ஊராட்சிகளுக்கு ரூ.1.71 கோடியும் ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள், யாருக்கு டெண்டர் வழங்குவது, எந்த அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என பல்வேறு வழிகாட்டுதல்களை  கூறியுள்ளது. குறிப்பாக இத்திட்டம் கிராம ஊராட்சிகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தப் பணிகளுக்கான டெண்டர் ரகசியமான முறையில் நடத்தப்பட்டது.

ஒப்பந்தப்பணிகள் மணப்பாறை அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரின் குடும்பத்தினரை பங்குதாரர்களாகக் கொண்ட நிறுவனத்திற்கும், ஆளுங்கட்சி நிர்வாகிகளின் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியங்களில் ஜல்ஜீவன் மிஷன் திட்டப்பணிகளுக்கு பணம் வழங்கக் கூடாது என்றும், தகுதியற்ற நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். வக்கீல் கணபதி சுப்ரமணியன் ஆஜராகி, ‘‘ஆளுங்கட்சி எம்எல்ஏவின் அழுத்தத்தால் அவரது உறவினர்களின் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர். இது விதிமீறல். குறிப்பாக இவர்கள் பணிகளை மேற்கொண்ட அனுபவம் இல்லை. இவர்களால் பணிகள் முறையாக நடக்க வாய்ப்பில்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மத்திய ஜல்சக்தி துறை செயலர், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமை செயலர், குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர், திருச்சி கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Tags : AIADMK MLA ,State Governments ,Central , Is the tender allotment to AIADMK MLA family in Jaljeevan Mission project in violation of rules? Notice to Central and State Governments
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...