×

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் மீண்டும் விநியோகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரூ.300 தரிசன டிக்கெட் நேற்று முதல் மீண்டும் விநியோகம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் ரூ.300 மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகளை பக்தர்களுக்கு அதிகளவில் வழங்கியது. 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பக்தர்கள் வரை தினமும் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் இருந்து சுற்றுலாத்துறை சார்பில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் கடந்த 8 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கியது. இந்த சேவையில் நாளொன்றுக்கு 2,250 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறைக்கு 1,000 டிக்கெட்டுகள், தெலங்கானா மாநில சுற்றுலாத்துறைக்கு 350 டிக்கெட்டுகள், தமிழக சுற்றுலாத்துறை மற்றும் ஏர் இந்தியா துறைகளுக்கு தலா 250 டிக்கெட்டுகள், கர்நாடக மாநில சுற்றுலாத்துறைக்கு 200 டிக்கெட்டுகள், ஐடிடிசி மற்றும் கோவா மாநில சுற்றுலாத்துறைக்கு 200 டிக்கெட்டுகள் வழங்கப்படும். இந்த டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupati Ezhumalayana , Tirupati
× RELATED திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 1.60...