×

இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும்: விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் கருத்திற்கு சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு.!!!

புதுடெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உலகளவில் சில பிரபலங்கள் கருத்து வரும்நிலையில் பிரபல பாடகியும், கலைஞருமான ரிஹானாவும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் சிஎன்என் இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரையை டேக் செய்து, அத்துடன் ‘இணையதள துண்டிப்பு குறித்து ஏன் யாரும் பேசவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இவரது டுவிட் வேகமாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பாலிவுட் நடிகை கங்கனாவும் ஒரு டுவிட் செய்துள்ளார்.

அதில், ‘யாரும் இதைப் பற்றி பேசவில்லை; ஏனெனில் அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவைப் பிளவுபடுத்த முயற்சிக்கும் தீவிரவாதிகள். சீனா போன்ற நாடுகள் நம் நாட்டை கையகப்படுத்தி, இங்கு சீன காலனியை உருவாக்க முயற்சிக்கின்றன. நீங்கள் அமைதியாக இருக்கும் ஒரு முட்டாள். உங்களது நாட்டை (அமெரிக்கா) விற்பவர்கள் போன்ற முட்டாள்கள் நாங்கள் அல்ல’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் காரசார கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

ரிஹானாவின் டுவிட்டுக்கு பிறகு, ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கும் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டில், ‘இந்திய விவசாயிகள் போராட்டத்துடன் நாங்களும் துணை நிற்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இவ்வாறாக சமூக வலைதளங்களில் விவசாய போராட்டம் குறித்து பதிவுகள் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகின்றன. ரிஹானாவிற்கு பதில் அளித்துள்ள சில ரசிகர்கள், இந்திய விவசாய போராட்டத்தில் இருந்து விலகி இருக்கும்படியும், சிலர் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும் காரசார கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்தியாவை தெரியும், ஒரே நாடாக ஒற்றுமையுடன் இருக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த பதிவு உலகளவில் வைரலாகி வருகிறது.



Tags : India ,Indians ,celebrities ,struggle ,Sachin Tendulkar , Indians know India: Sachin Tendulkar opposes foreign celebrities 'comments on farmers' struggle !!!
× RELATED சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி...