×

பேரணியில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து கண்டிப்பாக சட்டம் தன் கடமையை செய்யும் என பிரதமர் மோடி உறுதி : உச்சநீதிமன்றம்

டெல்லி : குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது.ஜனவரி 26ம் தேதி குடியரசுத் தின விழா அன்று மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினார்கள். இதில் கொடுக்கப்பட்ட நேர அனுமதிக்கு முன்னதாகவே விவசாயிகள் பேரணிக்கு கிளம்பியதால் வன்முறை வெடித்தது. இதில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல் துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டு வீசியதால் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். இதில் ஏராளமான பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டதாக டெல்லி போலீசார் மற்றும் மத்திய அரசு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வன்முறை சம்பவங்கள் குறித்து வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், டிராக்டர் பேரணி பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன்னாள்  நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதேப்போல் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை குற்றவாளியாக சில ஊடகங்கள் சித்தரிப்பதை தடுக்கக்கோரி மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ஆகிய இருவரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட இரண்டு மனுக்களும் உச்ச நீதினறத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் முன்னதாக அமைக்கப்பட்டுள்ள குழு விரிவான விசாரணை நடத்தும் என்பதை நீதிமன்றம் நம்புகிறது. அதேப்போன்று, டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து கண்டிப்பாக சட்டம் தன் கடமையை செய்யும் என பிரதமர் நரேந்திர மோடியும் உறுதியளித்துள்ளர் என்பதை மனுதாரர்களிடம் சுட்டிக்காட்டியதோடு, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும் இதுகுறித்து ஏதேனும் கோரிக்கை இருந்தால் அதனை மத்திய அரசிடம் சென்று முன்வைக்கலாம் என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

Tags : Modi ,rally ,incident ,Supreme Court , உச்சநீதிமன்றம்
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...