×

‘தூய்மை இந்தியா’ அல்ல, நாறும் இந்தியா : விசிக எம்.பி. ரவிக்குமார் விமர்சனம்!!

டெல்லி : நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த தொழிலாளர்கள் 340 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 2ம் இடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் எம்.பி. ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அளித்த பதிலில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை 5 ஆண்டுகளில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்த போது, 340 பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 52 பேர் உயிரிழந்ததாகவும், அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 43 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி, மகாராஷ்திரா, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்தவர்கள் அதிகளவில் உயிரிழந்திருப்பது மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. டெல்லி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா நான்காவது இடத்தில் உள்ளது. 34 பேர் உயிரிழந்துள்ளனர். அரியானா மற்றும் குஜராத் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன. தலா 31 பேர் உயிரிழந்துள்ளனர்.கழிவுநீரை அகற்ற போதிய அளவில் இயந்திரங்களின் பயன்பாடு நடைமுறைக்கு வராததே இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்பும் மாவட்ட எம்.பி. ரவிக்குமார், ‘’நாறும் இந்தியா.. சாக்கடை சுத்தம் செய்வதில் ஈடுபட்ட தொழிலாளிகள் 340 பேர் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் உயிரிழப்பு. தமிழ்நாட்டில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு 2வது இடம்! ‘தூய்மை இந்தியா’ அல்ல, நாறும் இந்தியா! ’’என்கிறார்.  


Tags : India , Ravikumar, Review
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!