×

திருநின்றவூர் பேரூராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பை, மருத்துவ கழிவுகள்: தொற்றுநோய் அபாயம்: அதிகாரிகள் அலட்சியம்

ஆவடி: திருநின்றவூர் பேரூராட்சியில் கோமதிபுரம், பெரியகாலனி, ராமதாசபுரம், கன்னிகாபுரம், சுதேசி நகர், முத்தமிழ் நகர், திருவேங்கடநகர், பெரியார் நகர், அந்தோணி, தாசர்புரம், லெட்சுமிபுரம், கிருஷ்ணாபுரம், வச்சலாபுரம், முருகேசன் நகர், லலிதாஞ்சலி நகர், பிரகாஷ் நகர், சாந்தி நகர், ஐ.ஒ.வி நகர், இந்திரா நகர், பாலகிருஷ்ணா நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன. இங்குள்ள 18 வார்டுகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சென்னையை ஒட்டியுள்ள பேருராட்சிகளில் திருநின்றவூர் பேரூராட்சியும் ஒன்றாகும். இப்பகுதியில் உள்ள குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் சரிவர அகற்றாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “திருநின்றவூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கும் குப்பை, மக்கா குப்பை சேகரிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் தொய்வு காட்டி வருகிறது. சமீப காலமாக முக்கிய பிரதான சாலை, தெருக்களில் உள்ள குப்பைகளை சரிவர அகற்றாமல் கிடக்கிறது.  இதனால், பல தெருக்களில் உள்ள தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து வழிகின்றன.
மேலும், சாலைகளில் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. இங்குள்ள சாலை ஓரங்களில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து மருத்துவக் கழிவுகள், காலாவதியான உணவு பொருட்களையும் கொட்டி வருகின்றனர். இதனை உண்ணும் கால்நடைகள் அடிக்கடி நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகிறது. சில நேரங்களில் அவைகள் உயிர் பலியாகியும் வருகின்றன. குப்பைகள் நாளடைவில் மக்கி தூர்நாற்றம் வீசுகின்றன. அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி  பொதுமக்களுக்கு பல வகையான நோய்கள் ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் கூறியும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்” என்றனர்.

ஊழியர்கள் தட்டுப்பாடு
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “பேரூராட்சியில் குப்பை அகற்ற போதுமான தூய்மை பணியாளர்கள் இல்லை. இப்படி இருக்கையில் அவர்களையே டிரைவர், எலக்ட்ரிஷியன் வேலைகளுக்கும் அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், உயர் அதிகாரிகள் வீடுகளிலும் தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனால் ஊழியர்கள் தட்டுப்பட்டால் தெருக்களில் குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது” என்றனர்.

Tags : Thiruninravur , Thiruninravur, Medical Waste, Infectious, Risk
× RELATED குடும்பத்தை கவனிக்காமல் அடிக்கடி...