×

சிவகிரி மலையில் மான் வேட்டையாடிய 7 பேர் கைது!: 10 லட்சம் அபராதம் விதித்தது வனத்துறை..!!

தென்காசி: சங்கரன்கோவில் அருகே மான் வேட்டையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடி வியாபாரம் செய்து வந்துள்ளார்கள். இதுகுறித்து ரகசிய தகவலின் அடிப்படையில், வனத்துறை அதிகாரி சுரேஷ் தலைமையிலான தனிப்படையினர், சோதனை மேற்கொண்டபோது மான் இறைச்சியை விற்பனை செய்த 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஓராண்டுக்கும் மேலாக மான், உடும்பு, காட்டு பன்றிகளை வேட்டையாடி வியாபாரம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அவர்களுக்கு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தலா 75 ஆயிரம் வீதம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்ற வனக்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சிவகிரி வனச்சரகர் சுரேஷ் தெரிவித்ததாவது, கடந்த ஓராண்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வன உயிரின குற்றங்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் தேதி நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாடிய 10 நபர்களை கைது செய்து 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளோம். தொடர் வேட்டையில் ஈடுபடும் நபர்களை கண்காணிப்பதற்காக சிவகிரி வணப்பணியாளர்கள் தனிக்குழுவாக இரவு, பகல் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இரவு நேரங்களில் மின்சார வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக புகார் எழுந்ததை அடுத்து, இரவு ரோந்து பணியில் மின்சாரம் பாய்ச்சுவோர்களையும் கண்காணித்து வருகிறோம் என குறிப்பிட்டார்.


Tags : hills ,Forest Department ,Sivagiri , Sivagiri Hill, deer hunting, 7 arrested
× RELATED கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில்...