×

15 ஆண்டு பழமையான வாகனங்களை அழிக்க புதிய திட்டம் அறிவிப்பு: தமிழகத்தில் 1.65 லட்சம் லாரிகளை அழிக்க வேண்டிய நிலை உருவாகும்: உரிமையாளர்கள் வேதனை

சேலம்: மத்திய அரசு நேற்று அறிவித்துள்ள பட்ஜெட்டில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் 15 ஆண்டுகளான பழைய வாகனங்களை அழிக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தால் தமிழகத்தில் 1 லட்சத்து 65ஆயிரம் லாரிகள்  பயனற்று போகும் நிலை ஏற்படும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்தியா முழுவதும் பழைய வாகனங்களை அழிக்க புதிய திட்டத்தை அறிவித்தார். இந்த புதிய கொள்கையின்படி, சொந்த  பயன்பாட்டுக்கான வாகனங்களாக இருந்தால் 20 ஆண்டு எனவும், வணிக பயன்பாடாக இருந்தால் 15 ஆண்டு எனவும் கொண்டு பழைய வாகனங்களை தானாக முன்வந்து ஒப்படைக்கலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாகன  உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது: தமிழகத்தில் 4 லட்சத்து 63 ஆயிரம் லாரிகள் ஓடுகின்றன. இதில் 15  ஆண்டு பழமையான லாரிகள் 1 லட்சத்து 65 ஆயிரமாகும்.

பொதுவாக 15 ஆண்டுகளான லாரிகளை வைத்திருப்பவர்கள் அவர்களாகவே ஓனராகவும், டிரைவாகவும் இருப்பார்கள். ஒரு சிலர் வேண்டுமானால் 3 முதல் 5 லாரிகளை வைத்திருக்கலாம். மத்திய அரசு பட்ஜெட்டில் வணிக பயன்பாட்டிற்காக  பயன்படுத்தி வரும் 15 ஆண்டு பழமையான வாகனங்களை அழிக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தால் சிறு லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள். இந்த திட்டம் ஏற்கனவே கடந்த பட்ஜெட்டில்  அறிவிக்கப்பட்டதுதான். 15 ஆண்டு பழமையான வாகனங்களை ஒப்படைப்பதற்கான கட்டமைப்பு வசதி இதுநாள்வரை இந்தியா முழுவதும் எங்கும் ஏற்படுத்தப்படவில்லை. 15 ஆண்டு வாகனங்களை ஒப்படைக்கும் திட்டம் 2022 ஏப்ரல் 1ம்  தேதியில் இருந்துதான் அமலுக்கு வருகிறது என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

15 ஆண்டு பழமையான வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் பெரும்பாலும் சிறு ஓனர்கள்தான். இதுபோன்ற வாகனங்களை அழித்தால் சிறு ஓனர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் பாதிக்காத வகையில் 15 ஆண்டு என்பதை  20 ஆண்டுகள் என உயர்த்தி மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். இத்தொழிலை சார்ந்து டிரைவர், கிளீனர், மெக்கானிக் பட்டறை என  ஆயிரக்கணக்கானோர் நம்பி இருக்கின்றனர். எனவே வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கும் 20 ஆண்டாக நீட்டிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : Owners ,Tamil Nadu , New plan to destroy 15-year-old vehicles Announced: 1.65 lakh lorries to be destroyed in Tamil Nadu: Owners tormented
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: நாளை தியேட்டரில் பகல்நேர காட்சிகள் ரத்து