×

சிவன் கோயில் ரதவீதியில் தொடரும் ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் அலட்சியம்

சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் வடக்கு ரதவீதியில் தள்ளுவண்டி பழக்கடைகளால் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.  சிவகாசி மையப்பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சிவன் கோயிலுக்குள் துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, முருகன், பைரவர், நவக்கிரகங்களும் நிறுவப்பட்டுள்ளதால் பெண்கள் தினமும் இந்த கோயிலுக்கு அதிகம்  வந்து செல்கின்றனர். பிரதோஷம் போன்ற விசேஷ தினங்களில் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் கோயிலுக்கு சுவாமிதரிசனம் செய்ய வருகின்றனர். அறநிலைய துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், வடக்கு ரதவீதியில் கோயிலின் சுவரை ஒட்டி தள்ளுவண்டி பழக்கடைகள் அமைத்துள்ளனர்.

பக்தர்கள் கோயிலின் ரதவீதியை சுற்றி வர வழியின்றி அவதிப்படுகின்றனர். வடக்கு ரதவீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் தினமும் சிரமபடுகின்றனர். வடக்கு ரத வீதியில் நகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட பழக்கடைகள், ஹோட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் சிவகாசி நகராட்சி நிர்வாகத்திற்கு மாதந்தோறும் வாடகை செலுத்துகின்றனர். ஆனால், வடக்கு ரதவீதியில் நகராட்சி அனுமதியின்றி தள்ளுவண்டி பழக்கடைள் சிலர் அமைத்துள்ளனர். இவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

சிவன் கோயில் ரதவீதி பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்க  தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இப்பகுதியில் ஏராளமான நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்துள்ளனர். இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. சிவன் கோயில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் வியாபாரிகளால் போக்குவரதது நெரிசல் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் அனுமதியின்றி அமைத்துள்ள தற்காலிக கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : temple chariot road ,Shiva , Ongoing occupation of Shiva temple chariot road: Officials negligence
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...