×

ஈரோடு கிழக்கு தொகுதியில் மல்லுக்கட்டும் அ.தி.மு.க. பிரபலங்கள்

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியானது கடந்த 2008ம் ஆண்டு, தொகுதி மறுசீரமைப்பின்போது புதியதாக உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின் 2011-ல் நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனார். தற்போது, சந்திரகுமார் தி.மு.க.வில் கொள்கை பரப்பு துணை செயலாளராக உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. நேரடியாக இத்தொகுதியில் களம் கண்டது. இதில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார். மாவட்டத்தில் பரப்பளவில் சிறிய சட்டமன்ற தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல்படி, இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,10,934 ேபர், பெண் வாக்காளர்கள் 1,15,987 பேர், மூன்றாம் பாலினத்தினர் 15 பேர் என மொத்தம் 2,26,936 வாக்காளர்கள் உள்ளனர்.

ஈரோடு மாநகர பகுதிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம், பி.பெ.அக்ரஹாரம், வைராபாளையம், கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளை இத்தொகுதி கொண்டுள்ளது. இத்தொகுதியில் பிரதான தொழிலாக ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதேபோல், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், ஜவுளித்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகவும் இது உள்ளது. இத்தொகுதியில், கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தென்னரசு, ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும், ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம், தினசரி மார்க்கெட்டிற்கு புதிய கட்டிடம் கட்டப்படும், போக்குவரத்து நெரிசலை குறைக்க புறநகர் பேருந்து நிலையம், பன்னீர்செல்வம் பார்க்கில் மேம்பாலம், சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு, ஈரோடு அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

இதில், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், ஜவுளி வளாகம் அமைத்தல், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இதர, வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. இத்தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம், கடந்த 5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. கட்டிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இத்தொகுதி எம்.எல்.ஏ.வை, தொகுதி மக்கள் சந்திக்க வேண்டுமென்றால், அவரது வீட்டிற்குத்தான் செல்லவேண்டும். அங்கு சென்றாலும், எப்போதாவதுதான் சந்திக்க முடியும் என்றும், எம்.எல்.ஏ. வருமானத்தின் பெரும் பகுதியை தனக்கு ஒதுக்கி வைத்துக்கொண்டு, சிறு பகுதி மட்டுமே கட்சிக்காக  செலவிடுகிறார் என்றும் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

கட்சி தொண்டர்களிடம் போதிய அளவில் ஆதரவு இல்லாவிட்டாலும், இத்தொகுதியில் இரண்டாவது முறையாக களம் இறங்க எம்.எல்.ஏ. தென்னரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், வணிக வளாகங்கள், சாலை கட்டமைப்பு, மனுநீதிநாள் முகாம் நடத்தி மக்கள் குறைகளை கேட்பது, கொரோனா நிவாரண பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட செயல்பாடுகளால் மக்களிடம் ஓரளவு நல்ல பெயர் வாங்கியிருந்தாலும், இவரால், கட்சியின் உள்குத்து வேலைகளை எதிர்கொள்ள முடியவில்லை. இது, பெரும் சவாலாக உள்ளது என கூறுகிறார்.

இத்தொகுதி மீது, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கமும் ஒரு கண் வைத்துள்ளார். கட்சியின் மேலிட ஆதரவுடன் இத்தொகுதியில் போட்டியிட சீட் வாங்கி விடுவார் என்கிறார்கள்  ராமலிங்கத்தின் ஆதரவாளர்கள். அதேநேரம், மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் நெருக்கமாக உள்ள மனோகரனும் இத்தொகுதியை குறி ைவக்கிறார். ஏற்கனவே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இத்தொகுதியில், மனோகரனுக்கு ‘சீட்’ கொடுக்கப்பட்டு பின்னர், சில நாட்களிலேயே வேட்பாளர் மாற்றப்பட்டார். அதுபோல் அல்லாமல், இம்முறை எனக்கு கண்டிப்பாக இத்தொகுதியில் சீட் கிடைக்கும் என மனோகரன் மார் தட்டி வருகிறார்.
அதேநேரம், மனோகரன் மாவட்ட செயலாளர் ராமலிங்கத்தை மதிக்காமல், தனக்கென ஒரு கோஷ்டியை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதால், எப்படி சீட் வாங்குவார் என்பதை பார்த்துவிடலாம் என்கின்றனர் எதிரணியினர். தனது செல்வாக்கை பயன்படுத்தி சீட் வாங்கினாலும், அவருக்கு சரியான பாடம் கற்பிப்போம் என அ.தி.மு.க.வினரே வரிந்து கட்டுவதால், இத்தொகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு கண்ணும், மேற்கு தொகுதியில் மற்றொரு கண்ணும் வைத்துள்ள பகுதி செயலாளர் கேசவமூர்த்தியும் களத்தில் இறங்கி, ரேஸ்-க்கு தயாராகியுள்ளார். இவர், மாவட்ட செயலாளர் ராமலிங்கத்தின் ஆதரவு கிடைக்கும் என நம்பிக்கையுடன் உள்ளார். மற்றபடி இவருக்கு, கட்சியின் மேலிடத்தில் சொல்லிக்கொள்கிற அளவுக்கு செல்வாக்கு இல்லை. இவரைப்போலவே, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவமும் இத்தொகுதியில் களம் இறங்க காய் நகர்த்தி வருகிறார்.
 இவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒதுங்கி இருந்துவிட்டு, கடந்த 6 மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபடுவதுபோல், போட்டோவுக்கு போஸ் கொடுத்து வருகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடந்த தர்மயுத்தத்தின்போது, இவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். இவருக்கு, சீட் கொடுக்கக்கூடாது என்பதில் அ.தி.மு.க. தொண்டர்கள் தீவிரமாக உள்ளனர்.

ஜெயலலிதா காலத்தில், மேயர் வேட்பாளராக மல்லிகா பரமசிவம் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, இரவோடு இரவாக ஈரோடு முழுவதும் மல்லிகா பற்றி வில்லங்க போஸ்டர் ஒட்டப்பட்ட விவகாரத்ைத கட்சி தொண்டர்கள் இன்னும் மறக்காமல் உள்ளனர். இதே போல், மாவட்ட மாணவரணி நிர்வாகி நந்தகோபால் என்பவர், நான்தான் இத்தொகுதி வேட்பாளர் என முஷ்டி முறுக்குகிறார். கட்சி நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை செல்லாமல், சமூக பின்னணியை மட்டுமே தகுதியாக வைத்துக்கொண்டு, இவர் வெறும் கையால் கம்பு சுத்துகிறார் என்கிறார்கள் கட்சியின் சீனியர் லீடர்கள்.

இத்தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி எழுந்துள்ளதால், இம்முறை யாருக்கு சீட் கிடைத்தாலும், அவர்கள் உள்கட்சிக்குள்ளேயே மல்லுக்கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்கள் தொண்டர்கள்.


Tags : AIADMK , Erode, Mallukkattum, ADMK, Celebrities
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...