×

7 வயது குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு 17 வயதான சிறுவனுக்கு விதிக்கப்பட்ட 35 ஆண்டு தண்டனை 21 வயதில் உறுதி : சேலம் போக்சோ நீதிமன்றம் அதிரடி


சேலம்:சேலம் மாவட்டம் கொளத்தூர் பக்கமுள்ள தெலுங்கனூரை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம் 2ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென அச்சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர், கொளத்தூர் போலீசில் புகார் செய்தனர். விசாரணையில், அருகில் உள்ள 17 வயதான சிறுவன் அச்சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று வீட்டின் அண்டாவில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி தீர்ப்பு கூறினார். அதில், போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், கொலைக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் என பல்வேறு சட்டபிரிவுகளுக்கும் சேர்த்து 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறுவனுக்கு தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். ஏககாலம் என்பதால் அவர் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். அப்போது சிறுவனுக்கு 19 வயது 2 மாதம் முடிவடைந் திருந்தது.

மேலும் நீதிபதி தனது தீர்ப்பில், குற்றவாளியான குழந்தைக்கு தற்போது 19 வயது 2 மாதம் ஆகிறது. குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின்படி, குழந்தை 21 வயது பூர்த்தியாகும் வரை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட வேண்டும். அதன்பிறகு நன்னடத்தை அலுவலர் குழந்தையின் சீர்திருத்தம் குறித்து மதிப்பீடு செய்து அறிக்கையை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 21 முடிந்த பிறகு குழந்தையை இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குழந்தை சீர்திருத்தம் அடைந்திருக்கிறதா? என்று மதிப்பீடு செய்த பிறகு அந்த குழந்தை சமுகத்திற்கு ஒரு பங்களிப்பு செய்யக்கூடிய குழந்தையாக இருந்தால் மீதமுள்ள தண்டனை காலத்தை குறைத்து விடுதலை செய்யலாமா? அல்லது குழந்தை சீர்திருத்தம் அடையாதிருந்தால் மீதமுள்ள தண்டனைக்காலத்தை சிறையில் கழிக்க வேண்டும் என்பது குறித்து 21 வயது முடிவடைந்ததும் இந்த நீதிமன்றம் முடிவு செய்யும் என அவரது தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்ட குழந்தையை, செங்கல்பட்டு சிறப்பு இல்லத்தில் சேர்த்திருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 31ம்தேதி, வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்திற்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அந்த குழந்தைக்கு 21 வயது முடிவடைந்த நிலையில் நேற்று மாலை குற்றம்சாட்டப்பட்ட வாலிபர் திருமூர்த்தியை சேலம் ேபாக்சோ நீதிமன்றத்தில் கொளத்தூர் போலீசார் ஆஜர் படுத்தினர். நன்னடத்தை அதிகாரியின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதில் விசாரணை நடத்திய நீதிபதி முருகானந்தம், மகளிர் நீதிமன்றம் விதித்த 35 ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்ததுடன், 10ஆண்டு சிறை தண்டனையை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும், சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுபவித்த தண்டனை நாட்களை கழித்துவிட்டு, மீதமுள்ள நாட்களுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.இதையடுத்து குற்றவாளி திருமூர்த்தியை போலீசார் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவிநாசி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

Tags : prison , Salem, Pokcho, Court
× RELATED நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார்...