×

திமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாய கடன், நகைக்கடன், கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும் : கந்தனேரியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

வேலூர் : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி கந்தனேரியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் பங்கேற்ற பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவற்றை பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைத்து சாவியை தன்னிடமே வைத்துக்கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், ‘மாநாடு போன்று ஏற்பாடு செய்த மாவட்ட செயலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அதேபோல் அவருடன் இணைந்து செயல்பட்ட அத்தனை பேருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன் வேலூர் மாவட்டத்தில் உள்ளூர் அமைச்சர் கே.சி.வீரமணி பல இடங்களை வளைத்து ஆக்கிரமித்துள்ளார். அமைச்சர் வேலை பார்க்கிறோரோ இல்லையோ, நிலங்களை வளைப்பதிலும், மிரட்டி அபகரிப்பதிலும் மிகச்சரியாக செய்கிறார்.

வேலூர் பஸ் நிலையம் அருகே நிலப்பிரச்னையில் அவரது தலையீடு உள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கும் உள்ளது. நில அபகரிப்பு விஷயத்தில் அவர் சிக்கிய வீடியோ உள்ளது. ஏலகிரி பெப்சி குடோன் வாங்கியது, மணல் கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுதவிர ஒட்டுமொத்த இந்த தொகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளது. திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அணைக்கட்டு தொகுதியில் உள்ள அனைத்து பகுதிக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படும். கே.வி.குப்பம் பகுதியில் சாலை வசதி, குடியாத்தம் பகுதிகளில் மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவமனை வசதிகளை மக்கள் கேட்டு வந்தனர். ஆனால் இந்த மாவட்டத்தின் அமைச்சர் வீரமணி தனது அதிகாரத்தை பயன்படுத்தி எந்த திட்டத்தையும் செய்யாமல் உள்ளார். நீங்கள் கொடுத்துள்ள மனுக்களை திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தனி இலாகா அமைக்கப்படும்.

என் மீது நம்பிக்கை வைத்து மனுக்கள் கொடுத்த அத்தனை பேருக்கு நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் நம்பிக்கை தான் எனது சொத்து. உங்கள் நம்பிக்கையை நிச்சயமாக நான் காப்பாற்றுவேன். உங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என தெரிவிக்கிறேன். நேற்று காலை திருவண்ணாமலையில் தொடங்கி மாலையில் ஆரணியில் பிரசாரம் செய்துவிட்டு இன்று வேலூர் வந்துள்ளேன். வேலூரில் ஒரு கூடுதலான பணி. அதை பணி என சொல்ல மாட்டேன். அதை எனது பாக்கியமாக கருதுகிறேன். மாநகர் அலுவலகத்தில் நம்மை உருவாக்கிய அண்ணா, அவரால் உருவாக்கப்பட்ட கலைஞர் ஆகியோரின் சிலைகளை திறக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

வேலூர் மாநகரில் திறந்து வைத்தது மிக பொருத்தமாக உள்ளது. ஏன் என்றால் வேலூர் என்றால் வீரம், விவேகம் மற்றும் சுதந்திரம். அப்படிப்பட்ட வேலூரில் உங்களை சந்தித்தில் மிக மகிழ்ச்சி. பொதுமக்கள் அளித்த அத்தனை மனுக்களையும் மாவட்ட வாரியாக பிரித்து இலாகா அமைத்து குறைகளை தீர்ப்பேன். தொகுதி வாரியாக முகாம் அமைத்து இப்பிரச்னைகளை 100 நாட்களில் தீர்ப்பேன். குறிப்பாக அதிமுக ஆட்சி செய்ய தவறிய கடமைகளை திமுக நிச்சயமாக செய்து முடிக்கும். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நான் கொடுத்த வாக்குறுதிகளை மறக்கவில்லை. விவசாய கடன், நகைக்கடன், கல்விக்கடன் ஆகியவற்றை திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தள்ளுபடி செய்யப்படும்.

இந்த கடன் தள்ளுபடியால் அரசாங்கம் கடனில் மூழ்கிவிடாதா? என கேட்கின்றனர். ஏன்? கார்பெட் கம்பெனிகளுக்கு சலுகை கொடுக்கும்போது ஏழை மக்களுக்கு கடன் ரத்து செய்யக்கூடாதா? இதன்மூலம் அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும். இலவச திட்டங்கள் என்பது கவர்ச்சி திட்டம் அல்ல, அவர்களது வாழ்வாதாரத்தை வளர்க்கும் திட்டம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் அனைத்து துறையிலும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. எந்த தொழில் வளர்ச்சியும் இல்லை, புதிய திட்டங்களும் இல்லை. முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொகுதியில் கூட அடிப்படை பிரச்னைகள் செய்யப்படாமல் படுகேவலமாக உள்ளது. எனவே உங்கள் மனுக்கள் மீதான நடவடிக்கை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்யப்படும். மக்களின் அரசாகவும், மக்கள் விரும்பும் அரசாகவும், மக்களின் பிரச்னைகளை போக்கும் அரசாகவும் திமுக விளங்கும். உங்களது படிவங்கள் அனைத்தையும் எனது முதுகில் ஏற்றப்பட்ட பாரங்களாக எடுத்துக்கொண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதை தீர்த்து வைப்பேன். உங்கள் அனைவரின் கோரிக்கைக்கும் முழுபலனும் கிடைக்கும். இவ்வாறு பேசினார்.


Tags : speech ,DMK ,MK Stalin , மு.க.ஸ்டாலின், பேச்சு
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...