×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசான கார் வழங்க தடை: ஆள்மாறாட்ட புகாரில் ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் நடந்ததால் முதல் பரிசு வழங்க ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.மதுரை மாவட்டம், மேலூர் அரிட்டாபட்டியைச் சேர்ந்த கருப்பணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 33ம் எண் பனியன் வழங்கப்பட்ட கண்ணன் என்பவர் அதிக காளைகளை அடக்கியதற்காக முதல் பரிசு பெற்றார். ஆனால் இவர் தொடர்பான எந்த ஆவணமும் ஜல்லிக்கட்டு கமிட்டியிடம் இல்லை.  ஆனால், போட்டியில் பங்கேற்று 33ம் எண் பனியன் அணிந்திருந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் முதல் சுற்றில் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அவரது 33வது நம்பர் பனியனை சட்டவிரோதமாக எந்தவித பரிசோதனையும் செய்யாமல் கண்ணன் என்பவர் அணிந்து ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளார். இவருக்கான பரிசு முதல்வரால் ஜன. 30ல் (இன்று) வழங்கப்படவுள்ளது. முறைகேடாக பரிசு பெற்றது குறித்து மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முதல் பரிசு (கார்) வழங்கத் தடை விதிக்கவேண்டும். முறையாக விசாரித்து 2ம் பரிசு அறிவிக்கப்பட்ட எனக்கு முதல் பரிசு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘பனியனை இருவரும் மாற்றி அணிந்து ஆள்மாறாட்டம் செய்துள்ளனர். மொத்தத்தில் அதிக காளைகளை அடக்கியதாக பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பரிசு பெற்றவர் மோசடி செய்துள்ளார் என்பதால், 2ம் பரிசு அறிவிக்கப்பட்டவருக்கே முதல் பரிசு வழங்க வேண்டும். ஆளுங்கட்சியினரின் ஆதரவு காரணமாக, அரசியல் அழுத்தத்தால் மோசடி நடந்தது தெரிந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. அவருக்கே முதல் பரிசை வழங்க திட்டமிட்டுள்ளனர்’’ என்றார். அரசு வக்கீல் ராஜராஜன் ஆஜராகி, ‘‘பரிசுகள் தொடர்பாக விழா கமிட்டி தான் முடிவு செய்ய வேண்டும். விசாரணை விபரம் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வழங்கத் தடை விதித்த நீதிபதி விசாரணையை பிப். 5க்கு தள்ளி வைத்தார்.

Tags : Alankanallur Jallikattu ,branch action , Alankanallur Jallikattil, first prize, car supply, banned
× RELATED பழனி கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பு.....