×

பாகிஸ்தான் 378ரன் குவிப்பு: தொடரும் தென் ஆப்ரிக்காவின் தடுமாற்றம்

கராச்சி: பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 378ரன் குவித்துள்ள நிலையில், தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சிலும் தடுமாற்றத்துடன்  விளையாடி வருகிறது. பாகிஸ்தான்-தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடக்கிறது. முதலில் விளையாடிய தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 69.2ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 220ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய பாக் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 107ஓவரில்  8 விக்கெட்களை இழந்து 308ரன் எடுத்திருந்தது. களத்தில் இருந்த ஹசன் அலி 11*, அறிமுக வீரர் நவுமன் அலி 6* ரன்னுடன் 3வது நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.  ஹசன் அலி 33 பந்தில் 21 ரன் எடுத்து ரபாடா பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து ஜோடி சேர்ந்த நவுமன் அலி-யாசிர் ஷா  கடைசி விக்கெட்டுக்கு 55ரன் குவித்தனர். நவுமன் அலியை 24ரன்னில் கேசவ் வெளியேற்ற பாக் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அந்த அணி 119.2 ஓவரில் 378ரன் குவித்தது. அந்த அணியின் யாசிர் ஷா 37பந்துகளில் 4பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38*ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தெ.ஆப்ரிக்கா அணியின் காகிசோ ரபாடா, கேசவ் மகராஜ் தலா 3, அன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி என்ஜிடி தலா 2 விக்கெட் எடுத்தனர்.  அதனையடுத்து 158ரன் பின்தங்கிய நிலையில் தெ.ஆப்ரிக்காக 2வது இன்னிங்சை தொடர்ந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு தொடக்க வீரர் டீன் எல்கர் 29ரன் எடுத்திருந்தபோது யாசிர் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு மார்க்ராம்-டுசன் இணை நிதானமாக பந்துகளை எதிர்கொண்டது.   அந்த பொறுமை காரணமாக இருவரும் அரை சதங்கள் விளாசியதுடன் 2வது விக்கெட்டுக்கு  127ரன் குவித்தனர். வாண்டெர் டுசன் 64 ரன்னிலும்,  தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் 74ரன்னிலும்  ஆட்டமிழந்தனர். இடையில் வந்த டு பிளெஸ்ஸி 10ரன்னில் வெளியேற, சிறிது நேரத்தில் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

 அப்போது தெ.ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில்  75 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 187  ரன் எடுத்திருந்தது. கேசவ் மகராஜ் 2*ரன்னுடனும், கேப்டன் டி காக் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். பாக் வீரர்கள் யாசிர் ஷா 3, நவுமன் அலி ஒரு விக்கெட் எடுத்தனர்.
இன்னும் 6 விக்கெட்கள் மிச்சமிருக்க 29ரன் முன்னிலையுடன் தெ.ஆப்ரிக்கா 4வது நாளான இன்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடும். தெ.ஆப்ரிக்கா 2வது இன்னிங்சிலும் தடுமாற்றத்துடன் விளையாடி வருவது, பாக் அணிக்கு சாதகமாக உள்ளது.

ரபாடா சாதனை
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் காகிசோ ரபாடா(25) கைப்பற்றிய ஹசன் அலி விக்கெட் அவரது 200வது விக்கெட்டாகும். டேல் ஸ்டெயின்(39வதுடெஸ்ட்), ஆலன் டொனால்டு(42) ஆகியோரை அடுத்து குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட் குவித்த 3வது தெ.ஆப்ரிக்க வீரர் என்ற பெருமையை ரபாடா(44) பெற்றுள்ளார்.   கூடவே இளம் வயதில் 200 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில்  வாக்கர் யூனிஸ்(பாகிஸ்தான்), கபில்தேவ், ஹர்பஜன் சிங்(இந்தியா) வரிசையில் 4வது இடத்தை ரபாடா பிடித்துள்ளார்.

Tags : Pakistan ,South Africa , Pakistan 378 runs accumulation: Continuing South Africa stumble
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா