×

வன்னியர்களுக்கு திமுக செய்த சாதனைகளை மறைத்து பொய் பிரசாரம் செய்யப்படுகிறது: ராமதாஸ் மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: வன்னிய சமூகத்துக்கு திமுக செய்த சாதனைகளை மறைத்து பாமக நிறுவனர் ராமதாஸ் பொய் பிரசாராம் செய்கிறார் என்று  மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார். திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி தொ.மு.ச. அலுவலக வளாகத்தில், மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்று திமுகவில் இணைந்தவர்களை வாழ்த்தி வரவேற்றார். மாற்றுக் கட்சியினரை திமுகவிற்கு வரவேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:


வன்னியர் சமுதாயம் திமுக ஆட்சியில் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 20 சதவீத இடஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு கேட்டுப் போராடி-உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், உதவித் தொகையையும் அளித்தது திமுக. தமிழ்நாட்டில் முதன் முதலில் டி.ஜி.பி.யாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்தது திமுக. டிஎன்பிஎஸ்சி, சென்னைப் பல்கலைக்கழகங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்தது திமுக. ஆனால், டாக்டர் ராமதாஸ் சொந்த ஆதாயத்திற்காக-சுய நலத்திற்காக, திமுக, வன்னியர் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை மறைத்து பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துதான் இன்றைக்கு பாமகவிருந்து நீங்கள் எல்லாம் விலகி-இந்த மாபெரும் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறீர்கள். ஆகவே, டாக்டர் ராமதாஸ் தி.மு.க.வைப் பற்றி விமர்சிக்க விமர்சிக்க, அக்கட்சியில் உள்ள பாட்டாளிகள் திமுகவை நோக்கி இன்னும் அதிகமாக வரப் போகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை.

தேர்தல் நாள் நெருங்க நெருங்க இன்னும் பல உளறல்களை பழனிசாமியிடமிருந்து நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் பழனிசாமியின் ஊழல்களுக்கு விசாரணைக் கமிஷன் போட வேண்டிய தேவையில்லை. அவர் கையெழுத்துப் போட்ட கோப்புகளில் அணிவகுத்து நிற்கிறது. செய்த ஊழல்களுக்கு எத்தனை ஆண்டுகள் சிறைக்குப் போக வேண்டும் என்பதை நினைத்து பழனிசாமிக்கு உறக்கம் வரவில்லை. உளறல்கள் தான் அதிகரிக்கிறது.
இப்போது,  நாளை (இன்று) முதல் திருவண்ணாமலையில் இருந்து, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பிரசாரத்தைத் தொடங்குகிறேன். நேரில் உங்களிடம் எல்லாம் ஒரு வாக்குறுதியைக் கொடுக்க வருகிறேன். உங்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களுக்குள், உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பது தான் அந்த வாக்குறுதி. இது ஸ்டாலினின் வாக்குறுதி. இந்த ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தால், அதை நிறைவேற்றிக் காட்டுவேன். அது தான்  கலைஞர் அவர்கள் எனக்கு கற்றுத் தந்த பாடம்.

திமுக என்றைக்கும் உங்களுக்கான கட்சி; தமிழக மக்களுக்கான கட்சி; தமிழ்நாட்டின் நலனுக்கான கட்சி; ஆகவே என்றைக்கும் அதே மன உறுதியுடன், இலக்குடன் திமுக ஏழை எளியவர்கள்-பாட்டாளி மக்கள் அனைவருக்கும் பாடுபடும் என்ற உறுதியை உங்களுக்கெல்லாம் தெரிவிக்கிறேன். நீங்கள் அனைவரும், அதிமுக ஆட்சியை அகற்றுவதற்கு, திமுக ஆட்சியை ஏற்படுத்துவதற்கு சபதம் ஏற்க வேண்டும். அந்தச் சபதத்துடன் கிராமம் கிராமமாக - வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

யார், யார் இணைந்தனர்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், குறிஞ்சிப்பாடி  மேற்கு ஒன்றியத்திலிருந்து மணிவர்மா தலைமையில் பாமகவிலிருந்து 500 பேர்,  தேமுதிகவிலிருந்து ஒன்றியப் பொறுப்பாளரும் அரசடிக்குப்பம் ஊராட்சி மன்றத்  தலைவருமான வீரபாண்டியன் தலைமையில் 60 பேர், தேமுதிகவிலிருந்து முன்னாள்  ஒன்றியச் செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான அனந்தராமன் தலைமையில்  200 பேர், பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம் பாமகவிலிருந்து ஒன்றிய துணைச்  செயலாளர் எ.சின்னத்தம்பி தலைமையில் 90 பேர், நாம் தமிழர் கட்சியிலிருந்து  வடக்குத்து ஊராட்சி செயலாளர் பிரபாகரன் தலைமையில் 120 பேர், நெய்வேலி நகர  எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் சொரத்தூர் சேகர் தலைமையில் 60 பேர்,  பண்ருட்டி ஒன்றியம் ரஜினி ரசிகர் மன்றத்திலிருந்து ஒன்றிய அமைப்பாளர்  கே.வெங்கடேசன் தலைமையில் 80 பேர் என, 1,110 பேர் மாற்றுக் கட்சிகளில்  இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


Tags : DMK ,Vanni ,Ramadas ,MK Stalin , DMK made for the Vanni Achievements are covered up and falsely propagated: MK Stalin's accusation against Ramadas
× RELATED திமுக சார்பில் நீர்மோர் வழங்கல்