×

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் சேதமான பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகள் அலட்சியம்-விவசாயிகள் குற்றச்சாட்டு

*குரலற்றவர்களின் குரல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. அதாவது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக விவசாயம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயபாளையம், தியாகதுருகம் ஆகிய பகுதிகள் கல்வராயன்மலை ஒட்டி அமைந்துள்ளன.

மேலும் இந்த பகுதியில் கோமுகி அணை மற்றும் மணிமுக்தா அணை என இரண்டு அணைகள் உள்ளன. கல்வராயன்மலையை பகுதிகளில் தொடர் மழை பெய்கின்றபோது அந்த மழை இரண்டு அணைகளுக்கு செல்லும் விதமாக வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அணையில் தண்ணீர் நிரம்பியதையடுத்து அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு என வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ள பகுதி வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அந்த அணையின் சுற்று பகுதியில் உள்ள கிராம ஏரிகள் நிரம்பி மூன்றுபோகமும் விவசாயம் செய்து வருகின்றனர்.    

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் அதிகளவில் செய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் நெற்பயிர், கரும்பு, உளுந்து, மக்காசோளம், மரவள்ளி, பருத்தி, கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிகப்படியாக பயிரிடுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டில் பெய்த பருவ மழையினை கொண்டு விவசாயிகள் கடன் வாங்கி பயிர்கள் செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் விவசாய பயிர்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்று முழுமையாக பயிர்கள் சேதமானது. நெற்பயிர்கள் 15 ஆயிரம் ஏக்கர், உளுந்து பயிர் 10 ஆயிரம் ஏக்கர், மரவள்ளி பயிர் 5500 ஏக்கர், பருத்தி 2000 ஏக்கர், மக்காசோளம் 500 ஏக்கர் பரப்பளவில் சேதமாகியுள்ளது.    

கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களில் நெல், உளுந்து ஆகியவை குறைந்த அளவில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு எடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் முறையிட்டால் கணக்கெடுப்பு நடத்துவதாககூறி அலைக்கழிப்பு செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் மரவள்ளி, பருத்தி, மக்காசோளம் ஆகிய பயிர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு எடுக்க மறுத்து வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் முறையிட்டும் அதிகாரிகள் கண்டும் காணமல் அலட்சியமாகவே இருந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசலேம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மரவள்ளி, பருத்தி, மக்காசோளம், உளுந்து ஆகிய பயிர்களை கணக்கெடுப்பு எடுக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள்  தொடர்ந்து மறுத்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்டத்தில் பெரும்பாலான விசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு முறையான காப்பீடு தொகையை அதிகாரிகள் பெற்றுத் தருவதே இல்லை. இந்த தொகையினை முறையாக வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   
 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கெடுப்பு நடத்தும் வகையிலும் அந்தந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் இணைந்து கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு முறையான நிவாரண உதவித்தொகை பெறும் விதமாக கிராம நிர்வாக அலுவலரிடம் படிவம் ஒப்புதலுடன் பாதிப்பு விபரங்களை பதிவு செய்கின்றபோது அரசின் நிவாரண உதவித் தொகை தள்ளுபடி செய்யப்படாமல் அனைவருக்கும் வழங்கப்படும். எனவே பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் படிவம் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாரபட்சமின்றி ஆய்வு செய்ய வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெல், உளுந்து, மரவள்ளி, பருத்தி, மக்காசோளம் ஆகிய பயிர்களை மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பாரபட்சமின்றி ஆய்வு செய்து முறையான கணக்கெடுப்பு எடுத்து  பாதிப்பு விபரங்களை அரசிடம் தெரியபடுத்தி அரசின் நிவாரண உதவி மற்றும் காப்பீடு தொகைபெற கள்ளக்குறிச்சி ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Khalukchi , Kallakurichi is an agricultural area throughout the district. I.e. Kallakurichi, Chinnasalem, Thiyakathurugam, Ulundurpet,
× RELATED கள்ளக்குறிச்சியில் பொது இடத்தில...