×

புத்தன் அணையில் இருந்து தினமும் 420 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம்

*மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளில் ₹60 கோடியில் திட்டம்

நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக இணைந்த பகுதிகளில் ரூ.60 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. தற்போது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புத்தன் அணையில் இருந்து தினமும் 420 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் ₹296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்காக குலசேகரம் அருகே உள்ள புத்தன்அணையில் இருந்து 31.85 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டு, நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்துக்காக கிருஷ்ணன்கோவிலில் ஏற்கனவே உள்ள சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் புதிதாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாநகர பகுதிக்குள் 475 கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு, வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. புத்தன் அணை குடிநீர் திட்டப்பணிக்காக ஏற்கனவே உள்ள 12 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் தவிர, புதிதாக 11 மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு, தண்ணீர் வினியோகம் செய்தும் சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த குடிநீர் தொட்டிகளில் இருந்து வீடுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்து சோதனை நடக்கிறது.

குடிநீர் வடிகால் வாரியம் இந்த திட்டத்துக்காக சுமார் 75 ஆயிரம் குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு 27 மண்டலங்களாக பிரித்துள்ளது. இதில் 7 மண்டலங்களில் முழுமையாக பணிகள் முடிவடைந்து வீடுகளுக்கே தண்ணீர் வினியோகம் நடக்கிறது. இது தவிர 9 மண்டலங்களில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. தற்போது நடந்து வரும் சோதனை முடிவடைந்த பின், இந்த பகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகம் இருக்கும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இது தவிர மற்ற மண்டலங்களில் பணிகளை இந்த மாதத்துக்குள் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் திட்டத்துக்காக சோதனை முறையில் தண்ணீர் வினியோகம் நடக்கும் நிலையில் ஆங்காங்கே ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார். புத்தன் அணை குடிநீர் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகர மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். முக்கடல் அணையில் தண்ணீர் இல்லாத நிலையில், தினமும் 420 லட்சம் லிட்டர் புத்தன் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரிப்பு செய்து முக்கடல் அணைக்கான குடிநீர் குழாய்கள் மூலம் சப்ளை நடக்கிறது.

இதனால் கோடை காலத்திலும் மாநகரில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை.இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைந்த ஆளூர், தெங்கம்புதூர் பேரூராட்சி பகுதிகள் தற்போது நாகர்கோவில் மாநகராட்சியில் 1,2,3 மற்றும் 51, 52, 53 ஆகிய 6 வார்டுகளாக உள்ளன. இந்த 6 வார்டுகளுக்கும் 24X7 திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில் ₹60 கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தற்போது புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளுக்காக பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் இருந்தே இணைப்பு கொடுக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான திட்ட அறிக்கை, தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் முடிவடைந்த பின், இந்த இணைப்பு திட்டத்துக்கான பணிகள் தொடங்கும் என தெரிகிறது.

The post புத்தன் அணையில் இருந்து தினமும் 420 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் appeared first on Dinakaran.

Tags : Budhan Dam ,Nagercoil Municipal Corporation ,Nagercoil Corporation ,Puthan Dam ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது