×

செங்கோட்டையில் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியாது : மத்திய அரசு காட்டம்

டெல்லி : டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதனை தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இதற்கிடையில், விவசாயிகள் செங்கோட்டைக்குள் புகுந்து அங்கு கொடி ஒன்றை ஏற்றினர். இந்த சம்பவம்  நாடு முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இது குறித்து, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடி இழிவு படுத்தப்பட்டதை இந்தியா சகித்துக் கொள்ளாது என்று கூறினார்.பஞ்சாபில் இருந்து டிராக்டர்களை ஓட்டி வந்த பலர் குற்றங்களில் ஈடுபடும் குண்டர்கள் என்றும் அவர்களை அம்மாநில காங்கிரஸ் அரசு முன்கூட்டியே காய் செய்யாதது ஏன் என்பது ஜவடேகரின் கேள்வியாகும். விவசாயிகள் போராட்டத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆதரித்தது மட்டுமல்லாது தூண்டிவிட்டார் என்றும் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டினார்.

எனவே அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். நாட்டின் தேசியக்கொடி அவமானப்படுத்தப்படுவதை ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது என்று பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டையில் தேசிய கொடியை அவமானப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப் நடிகர் தீப் சிங் சித்து பாஜக கட்சியைச் சேர்ந்தவர் என்று காங்கிரஸ் கட்சி கூறுவது அபத்தம் என்றும் அமைச்சர் ஜவடேகர் கூறியுள்ளார். 


Tags : Red Fort ,government , Red Fort, National Flag, Central Government
× RELATED செங்கோட்டை அருகே பைக் மோதி காயமடைந்த விவசாயி சாவு