சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை

சீர்காழி : சீர்காழியில் தாய்,  மகனை கொன்று ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிய கொள்ளையன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசிப்பவர் தன்ராஜ். இவர் தருமகுளத்தில் தங்க நகை மொத்த வியாபாரம் செய்து  வருகிறார். இவரது மனைவி ஆஷா,மகன் அக்கில். மருமகள் நெக்கில் ஆகிய 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில், இன்று தன்ராஜின் வீட்டிற்குள் மர்மநபர்கள் நுழைந்துள்ளனர். இதனை கண்டு தொடர்ந்து சத்தமிட்டு கொண்டிருந்த தன்ராஜின் மனைவி ஆஷா மற்றும் மகன் அக்கீல் ஆகியோரை கொள்ளை கும்பல் கத்தியால் சரமாரி குத்தினர். இதில் 2 பேரும் அதே இடத்தில் இறந்தனர். தன்ராஜ் மற்றும் அவரது மருமகளையும் கொள்ளையர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.

பின்னர் லாக்கரை திறந்து அதில் இருந்த நகைகளை  கொள்ளையர்கள் எடுத்துக்கொண்டனர். மேலும் வீட்டில்  பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்கையும் எடுத்துக்கொண்டு கொள்ளையர்கள்  சென்றனர்.  பின்னர், தன்ராஜிடம் சாவியை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வெளியில்  நிறுத்தி இருந்த அவரது காரையும் எடுத்துக்கொண்டு 3 கொள்ளையர்களும்  தப்பிச்சென்றனர். லாக்கரில் மொத்தம் ரூ.6 கோடி மதிப்பிலான 16 கிலோ தங்க நகைகள்  இருந்ததாம்.இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட  தாய், மகன் சடலங்களை சீர்காழி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நெடுஞ்சாலையை தவிர்த்துவிட்டு கிராமப்புற சாலை வழியே தப்ப முயன்ற போது, கொள்ளையர்கள் சென்ற கார் பழுதாகியுள்ளது. பிறகு எருக்கூர் சாலையில் காரை நிறுத்தி விட்டு வயல் வழியாக நகைப்பையுடன் 3 பேரும் தப்பி ஓடினர். தொடர்ந்து வயலிலேயே நகைகளை புதைத்து வைத்துள்ளனர். இதனை வயலில் வேலை செய்து  கொண்டிருந்த விவசாய தொழிலாளர்கள்  பார்த்து சந்தேகத்தின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வயலில் 3 கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். இதில் இருவர் பிடிபட்டனர். ஒருவன் போலீஸை தாக்கிவிட்டு தப்பி ஓடினான். அவனை பிடிக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து  அவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். போலீஸ் விசாரணையில்  பிடிபட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மனீஷ்(30), ரமேஷ்(25),  சுட்டுக்கொல்லப்பட்டவன் மகிபால்(24) என தெரியவந்தது. பிடிபட்டவர்களிடம்  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கொள்ளையன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்  அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More
>