×

ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி பலியான மகன் உடலை மீட்டு தர வேண்டும்-கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு

திருப்பூர் :  ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் தவறி விழுந்து பலியான மகனின் உடலை மீட்டு தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு கொடுத்தனர்.   திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டியில் பலர் மணுக்களை போட்டு சென்றனர். அதில் திருப்பூர் சாந்தி தியேட்டர் பகுதியை சேர்ந்த தாஜ் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகன் மஹபூப் பாஷா என்ற அபு (20) கடந்த 22ம் தேதி செமஸ்டர் பணம் கட்டுவதற்காக கல்லூரிக்கு சென்றான்.

அப்போது அவனுடன் சென்ற நண்பர்கள் சேர்ந்து ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்கும்போது, நீரில் அடித்து செல்லப்பட்டான். இது தொடர்பாக முறைப்படி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளோம். ஆனால், இதுவரை பலியான எனது மகன் உடல் கிடைக்கவில்லை. மீட்பு பணியில் அலட்சியமாக அதிகாரிகள் இருந்து வருகிறார்கள். மகன் உடல் கிடைக்காததால், நாங்கள் மிகவும் கவலையில் உள்ளோம்.

எனவே மீட்பு பணிகளை துரிதப்படுத்தி மகன் உடலை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.காளிபாளையம், படையப்பா நகர், வாரணாசிபாளையம், நியூ குருவாயூரப்பன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பகுதிகளில் 3 கிறிஸ்தவ குடும்பம் உள்பட 250 குடும்பத்தினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உமாராணி என்ற பெண் அப்பகுதியில் வீடு கட்டி குடியேறினார். அவர் கிறிஸ்தவ மதம் சார்ந்த ஜெபக்கூடம் அந்த பகுதியில் நடத்த முயற்சி செய்து வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே அவர் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளோம். அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, ஏழ்மையில் உள்ள இந்து மக்களை அழைத்து புத்தாடைகள் கொடுப்பதாக கூறி ஜெபக்கூடம் நடத்த முயற்சி செய்தார். இது தொடர்பாக அன்றும் பிரச்னை ஏற்பட்டது. ஏழ்மையில் உள்ள இந்துக்களை அவர் மதமாற்றம் செய்ய முயற்சி செய்து வருகிறார். எனவே சட்டவிரோதமாக ஜெபக்கூட்டம் நடத்த முயற்சி செய்கிற உமாராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

எஸ்.பெரியபாளையம் ஏ.சி.எஸ். மாடர்ன் சிட்டி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த ஒரு ஆண்டாக எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை நிலவுகிறது. ஒரு முறை குடிநீர் வந்தால், அதன்பிறகு 20 நாட்களுக்கு பிறகு தான் தண்ணீர் வருகிறது.

இது குறித்து கிராமசபை கூட்டத்தில் மனுவும், பஞ்சாயத்து தலைவரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீரை விலை கொடுத்து எங்களால் வாங்க முடியவில்லை. நாங்கள் கூலி வேலைக்கு சென்று பிழைத்து வருகிறோம். தற்போது கொரோனா பாதிப்பால் வேலை இன்றி சிரமப்பட்டு வருகிறோம். எனவே குடிநீர் உள்பட அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

   கே.வி.ஆர். குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில்:  எங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். ஆனால் இது தொடர்பான உத்தரவு வழங்கியும், அதிகாரிகள் எங்களது பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. தற்போது ஓடை இல்லாத அளவிற்கு எங்களது பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது.

இதுபோல் நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு செல்லும் வழிகளையும் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, எங்களது பகுதியில் ஆய்வு செய்து, ஆக்கிரப்பை உடனே அகற்ற வேண்டும். இல்லையென்றால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு கூறியிருந்தனர்.


Tags : Parent ,Office ,Collector , Tiruppur: Antipalayam B.A.P. Parents at the Collector's Office demanded that the body of the son who fell into the drain be recovered
× RELATED வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்