×

பத்ம விருதுகள் அறிவிப்பு எஸ்பிபி.க்கு பத்ம விபூஷண்

புதுடெல்லி: பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 119 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருதும், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு, கல்வி, மருத்துவம், சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.

இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு நேற்று அறிவித்தது. வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் இவ்விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார். இந்தாண்டில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 10 பேருக்கு பத்ம பூஷண், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 29 பேர் பெண்கள்; 16 பேருக்கு மறைவுக்குப்பிறகு இவ்விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு இந்தாண்டுக்கான பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, ஒடிசா சிற்பக் கலைஞர் சுதர்ஷன் சாஹோ, அமெரிக்காவை சேர்ந்த நரிந்தர் சிங் டெல்லியை சேர்ந்த மவுலானா வாஹீதுதின் கான், பி.பி.லால் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் முன்னாள் முதல்வர் மறைந்த தருண் கோகாய், மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், குஜராத் முன்னாள் முதல்வர் மறைந்த கேசுபாய் படேல் ஆகியோர் பத்ம பூஷண் விருதை பெற உள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த கேசவசாமி கலைப் பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

Tags : Announcement ,Padma Vibhushan ,SBP , Padma Awards Announcement Padma Vibhushan to SBP
× RELATED விஜயகாந்துக்கு பத்மவிபூஷன் விருது வழங்காமல் அவமதிப்பா..? தமிழிசை பதில்