×

9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு : 9, 11ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறப்பது குறித்து கல்வியாளர்கள், பெற்றோரிடம் கருத்துகேட்பு கூட்டத்திற்கு பிறகு தமிழக முதல்வர் அறிவிப்பார்,’’ என ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29.50 கோடி மதிப்பீட்டில் நவீனப்படுத்தப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள், பூமிபூஜையுடன் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பூமி பூஜையுடன் பணிகளை துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக துறை வாரியாக தேக்கம் அடைந்த பணிகளை ஆய்வு செய்து, உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 9, 11ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகள் திறப்பது குறித்து கல்வியாளர்கள், மாணவ- மாணவிகளின் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதன் முடிவுகள் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர், பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பார்.

தமிழக பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்று என வந்த செய்திகள் தவறானது. அதுபோன்ற நிலை ஏற்படவில்லை. 2 ஆசிரியர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படவில்லை. மக்கள் நல்வாழ்வு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முதற்கட்டமாகவும், 2ம் கட்டமாக சுகாதார பணியாளர்கள், 3வது கட்டமாக அரசு அலுவலர்கள், அதன் பின்னர் 4ம் கட்டம் என படிப்படியாக தான் போடப்பட உள்ளது. அதற்கேற்ப தான் கொரோனா தடுப்பூசிகளும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Tags : Palanisamy ,opening ,Tamil Nadu ,Senkottayan ,schools , அமைச்சர் செங்கோட்டையன்
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...