லடாக் மோதலுக்கு தீர்வு காண இந்தியா - சீனா 9ம் கட்ட பேச்சு

புதுடெல்லி:  லடாக் எல்லை மோதல் விவகாரம் தொடர்பாக இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தினாலான 9வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே கடந்த மே மாதம் தொடங்கி ராணுவ மோதல், தற்போது வரை நீடித்து வருகிறது. இருநாட்டு ராணுவமும் தலா 50 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளன. இப்பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண்பதற்கு, இருநாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 8 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 12ம் தேதி நடந்த 7வது கட்ட பேச்சுவார்த்தையின்போது போர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இருக்கும் இந்திய வீரர்கள் திரும்ப பெறப்பட வேண்டும் என சீனா அழுத்தம் கொடுத்தது. ஆனால், அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் இருநாட்டு ராணுவ வீரர்கள் திரும்ப பெறும் நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும் என இந்திய ராணுவம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கடந்த நவம்பர் 6ல் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தபட்டது. அப்போது கருத்து வேறுபாடு நிலவும் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து வீரர்களை திரும்பப் பெறுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இரண்டரை மாத இடைவெளிக்கு பின்னர் இந்திய - சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 9வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. கிழக்கு லடாக்கில் அசல் கட்டுப்பாடு கோடு பகுதியில் சீன எல்லையான மோல்டோவில் பேச்சுவார்த்தை நடந்தது. கிழக்கு லடாக்கில், இந்திய தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் பிஜிகே மேனன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில் இருநாடுகளும் கணிசமான வீரர்களை திரும்ப பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>