×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறட்டம் வீடியோ மூலம் கண்டுபிடிப்பு: கலெக்டரிடம் அறிக்கை இன்று தாக்கல்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள் மாறாட்டம் நடந்ததை வீடியோ பதிவு மூலம் கண்டுபிடித்த அதிகாரிகள், அதன் அறிக்கையை கலெக்டரிடம் இன்று தாக்கல் செய்வுள்ளனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 16ம் தேதி நடந்தது. இப்போட்டியில் சிறந்த வீரருக்கு முதல் பரிசாக முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. போட்டியின் முடிவில், அதிக காளை பிடித்ததாக கண்ணன் என்பவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால், கண்ணன் முழுமையாக களத்தில் இறங்கி விளையாடவில்லை. இதில் மோசடி நடந்துள்ளது என 2ம் இடத்தை பிடித்த பொதும்பு கருப்பண்ணன் புகார் கூறினார்.

மேலும் அவர் இதுகுறித்து நேற்று கலெக்டர் அன்பழகனிடம் கொடுத்த புகார் மனுவில், ‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் சுற்று முதல் 3ம் சுற்று வரை 33ம் எண்ணில், ஹரிகிருஷ்ணன் பங்கேற்று 7 காளைகளை பிடித்தார். மூன்றாம் சுற்றில் அவருக்கு காயம் ஏற்பட்டதால், அவர் வெளியேறினார். அப்போது, தனது பனியனை பதிவு செய்யாத மற்றொரு நபரிடம் (கண்ணன்) கொடுத்துள்ளார். அதில் அவர் 5 காளைகளை பிடித்தார். இதனால் 12 காளைகளை கண்ணன் பிடித்ததாக கருதி அவருக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் ஆள் மாறாட்டம் நடந்துள்ளது. முதல் பரிசு அவருக்கு வழங்கக்கூடாது. அதிக காளைகளை நான்தான் பிடித்துள்ளேன். எனவே, எனக்கு முதல் பரிசை வழங்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி ஆர்டிஓவிற்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்இதையடுத்து நேற்று மாலை வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் அலங்காநல்லூரில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியை தாசில்தார்கள் சிவக்குமார், பழனிக்குமார் மற்றும் வருவாய் ஊழியர்கள் சேர்ந்து போட்டு பார்த்தனர். அப்போது, 33ம் எண்ணுடைய நபர் காளை பிடிப்பதும். அவர் காயமடைந்து வெளியேறுவதும், பின்பு அதே பனியனை அணிந்து  வேறுநபர் களத்தில் விளையாடுவதை கண்டுபிடித்தனர். இதன்மூலம் ஆள்மாறட்டம் நடந்துள்ளதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பான அறிக்கையை தாசில்தார்கள் தயாரித்துள்ளனர். அந்த அறிக்கையை இன்று ஆர்.டிஓ, கலெக்டரிடம் வழங்க உள்ளனர்.

Tags : Alankanallur Jallikkat ,Collector , Discovery through impersonation video at Alankanallur Jallikkat: Report filed with Collector today
× RELATED குழந்தை திருமணங்களை தடுக்க ஆய்வு கூட்டம்