×

தங்கச்சுரங்க பிரச்னை தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் முருகேஷ் நிராணி உறுதி

பெங்களூரு: கோலார் தங்கச்சுரங்க பிரச்னை தொடர்பாக முதல்வர் எடியூரப்பாவுடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் முருகேஷ் நிராணி உறுதி அளித்தார். முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் சமீபத்தில் நடந்தது. எம்டிபி நாகராஜ், சிபி யோகேஸ்வர், முருகேஷ் நிராணி  உள்ளிட்ட  7 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்த நிலையில் அவர்களுக்கு துறைகளும் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் மாநில கனிம  வளத்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முருகேஷ் நிராணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
 அப்போது அவர் கூறியதாவது:

முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் எனக்கு இடம் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்பு தொழில் துறை அமைச்சராக ஐந்து வருடம் பணியாற்றினேன். தற்போது ஜெகதீஷ்ஷெட்டர் தொழில் துறை அமைச்சராக திறமையாக செயல்படுகிறார். அதே முறையில் கனிம வளத்துறையில் தற்போது காணப்படும் பிரச்னைகளை ஆராய்ந்து அதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும். 24 மணிநேரமும் கனிம நடவடிக்கை நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் சாதக, பாதகம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

மலேசியாவில் இருந்து எம்.சாண்ட் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பாக கடந்த காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. தற்போது அது எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். கோலார் தங்கவயல் தங்கச்சுரங்க பிரச்னைக்கு நீண்ட காலம் தீர்வு காணப்படவில்லை. கனிம வளர்ச்சி துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் முதல்வர் எடியூரப்பாவிடம் ஆலோசனை நடத்தி உரிய முடிவு எடுப்பேன். அமைச்சரவையில் இந்த துறை வேண்டும் என்று முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்கவில்லை.

துறை ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள் முதல்வர் எடியூரப்பா மீது நம்பிக்கை வைத்து தங்களுக்கு அளிக்கப்பட்ட துறைகளை நிர்வகிக்க வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ இவ்வாறு அவர் கூறினார். கனிம வளத்துறையில் தற்போது காணப்படும் பிரச்னைகளை ஆராய்ந்து அதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு முயற்சிமேற்கொள்ளப்படும்

Tags : Murugesh Nirani , In connection with the gold mining problem The decision will be taken in consultation with the Chief Minister: Minister Murugesh Nirani confirmed
× RELATED கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார்?:...