×

2019ம் ஆண்டு வீட்டு வசதி திட்டம் குலுக்கலில் வீடு கிடைத்தவர்களுக்கு இலவச பார்க்கிங் இடம் ஒதுக்கீடு: டிடிஏ நடவடிக்கை

புதுடெல்லி: குலுக்கலில் வீடு கிடைத்த 1,214 பயனாளிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கான இலவச பார்க்கிங் இடத்தை ஒதுக்கி டெல்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) அறிவித்தது. டிடிஏவின் வீட்டுவசதி 2019 திட்டத்தில் உயர், நடுத்தர, குறைந்த வருவாய் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் என 4 வகை பிரிவினருக்கு, டெல்லி வசந்த்கஞ்ச் பகுதியில் குலுக்கல் முறையில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலையில் வீடு ஒதுக்கப்பட்டது.

அதில் உயர் வருவாய் பிரிவில் 488, நடுத்தர வருவாய் பிரிவினர் 1,555, குறைந்த வருவாய் பிரிவில் 8,383 என மொத்தம் 18,000 வீடுகள் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறவில்லை. எனினும், விண்ணப்பித்த நபர்களில் 1,214 பேருக்கு டிடிஏ தலைமை அலுவலகம் அமைந்துள்ள விகாஸ் சதன் கட்டிடத்தில் குலுக்கல் நடத்தப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டன. அப்போது பார்க்கிங் ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே, பார்க்கிங் ஒதுக்கீட்டுக்கான குலுக்கலை ஒன்றரை ஆண்டுக்குப் பின், டிடிஏ நேற்று முன்தினம் நடத்தியது.

மொத்தம் 1,267 பார்க்கிங் இடங்களுக்கு குலுக்கல் நடத்தப்பட்டு, அதில் ஏற்கனவே விடு கிடைத்த 1,214 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் பார்க்கிங் இடம் ஒதுக்கப்பட்டது. உயர் வருவாய் பிரிவில் 416, நடுத்தர வருவாயினரில் 579 மற்றும் குறைந்த வருவாய் பிரிவில் 219 பேர் என மொத்தம் 1,214 பேருக்கு பார்க்கிங் இடம் இலவசமாக ஒதுக்கப்பட்டதாக டிடிஏ அதிகாரி தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘‘2021 வீட்டு வசதி திட்டத்தில் விண்ணப்பம் செய்துள்ள நபர்களுக்கு வீடு ஒதுக்கும் போதே பார்க்கிங் இடமும் ஒதுக்கப்படும்’’, எனக் கூறினார்.


Tags : house ,DDA , 2019 Housing Plan For those who got home in the shake Free parking space: DTA activity
× RELATED வெள்ளை மாளிகை கேட் மீது மோதிய கார் டிரைவர் பலி